Enable Javscript for better performance
காங்கிரஸின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரம்: ஞானதேசிகன்- Dinamani

சுடச்சுட

    

    காங்கிரஸின் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரசாரம்: ஞானதேசிகன்

    By db  |   Published on : 27th March 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress_canvas1

    கட்சியின் பொறுப்பாளர்கள் தெருத்தெருவாக சென்று வாக்காளர்களை சந்தித்து காங்கிரஸ் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குச் சேகரிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

    இது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற வேட்பாளர் சி.டி.மெய்யப்பன் அறிமுக நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:

    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது, திமுகவும் ஆதரிக்கவில்லை, காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர் என பல்வேறு கருத்துகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு பலர் சத்தியமூர்த்தி பவனை திங்கள்கிழமை (மார்ச் 26) முற்றுகையிட முயன்றனர். அந்தளவுக்கு தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு கட்சியினரிடம் அதிகரித்துள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் தனிப்பெருமையாகும்.

    சென்னை மாநகரில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், குடிநீர் திட்டங்கள், புதிய பஸ்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கான செலவில் 35 சதவீத நிதி மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இது குறித்த அனைத்து விவரங்களையும் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு கட்சியினர் விநியோகிக்க வேண்டும்.

    கட்சியின் பொறுப்பாளர்கள் தெருத்தெருவாக சென்று வாக்காளர்களை சந்தித்து காங்கிரஸ் அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும். இது காங்கிரஸ் கட்சியின் மானப் பிரச்னை.

    மக்களைவைத் தேர்தலில் வெற்றி பெற்று நமது பலத்தை நிரூபிக்க வேண்டும். முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ள சி.டி.மெய்யப்பனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ஞானதேசிகன்.

    மத்திய சென்னையில் போட்டியிடும் சி.டி.மெய்யப்பன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

    நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், பொதுச் செயலாளருமான கே.சிரஞ்சீவி, அண்ணாநகர் பகுதி தலைவர் ஜி.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai