Enable Javscript for better performance
மயிலாப்பூரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மயிலாப்பூரில் லஸ் கார்னரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீஸார் கூறியதாவது:

    மயிலாப்பூர் மாதவராவ் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் தமிழ்செல்வம் (24). அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடம் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். மேலும், சொந்தமாக வாடகை வேனும் ஓட்டி வந்தார்.

    இந்நிலையில், புதன்கிழமை மாலை 3 மணியளவில் தமிழ்செல்வம் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், செல்வத்திடம் தகராறு செய்தனராம். தகராறு முற்றவே 4 பேரும் தமிழ்செல்வத்தை அரிவாளால் வெட்டினர்.

    இதில் பலத்த காயமடைந்த செல்வம் அவர்களிடமிருந்து தப்பியோடினார். ஆனால், அந்த கும்பல் விரட்டிச் சென்று செல்வத்தை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.

    பட்டப்பகலில், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் பயத்தில் மக்கள் சிதறி ஓடினர். மேலும், அப்பகுதியில் இருந்த சில கடைகளும் சிறிது நேரம் மூடப்பட்டன. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், செல்வத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ரௌடியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது, அந்த ரௌடியின் மகனை தமிழ்செல்வம் அடித்ததாகவும் தெரியவந்துள்ளது.

    இச்சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மயிலாப்பூர் நாட்டான் தோட்டத்தைச் சேர்ந்த பள்ளு மதன், வெள்ளைக்குமார் மற்றும் அவரது மகன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அதேசமயம், அந்தப் பகுதியில் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வைத்துள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் தனியார் நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா ஆகியவற்றில் இக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai