Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பொதுக்கூட்டம் நடத்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கோவை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இளங்கோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

    டாக்டர் அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி, கோவை பீளமேடு ஆவாரம்பாளையத்தில் கடந்த 12-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கோரினோம்.

    ஆனால் சட்டம் ஒழுங்கு காரணமாக அனுமதி மறுத்து போலீஸார் உத்தரவிட்டனர். இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக ரூ. 10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். மே 4-ஆம் தேதி நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    நாங்கள் அனுமதி கோரிய இடத்தில் ஏற்கெனவே பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, மே 4-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு பீளமேடு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு:

    கருத்துச் சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுமானால், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அந்தத் துறை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனுமதி மறுக்க முடியாது.

    அதனால், தேவையான கட்டுப்பாடுகளுடன் மனுதாரருக்கு போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். மனுதாரரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத அளவில் கூட்டம் நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai