சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் நிர்பந்தம்: தாய், திரைப்பட இயக்குநர் கைது

    By dn  |   Published on : 11th February 2015 04:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் உட்படுத்தியதாக சிறுமியின் தாய், திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    சென்னை சி.பி.சி.ஐ.டி. ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் குழந்தைகள் நலக் குழு, தொண்டு நிறுவனம் அண்மையில் ஒரு புகார் அளித்தது. அந்த புகாரில் சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமியை தமிழ் திரைப்பட இயக்குநர் போரூரைச் சேர்ந்த செந்தமிழ் அரசு, தரகர் ராஜேஸ்வரி, சிறுமியின் தாயார் ஆகியோர் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ரகசிய விசாரணை செய்தனர். விசாரணையில் அந்தச் சிறுமியை அவர்கள் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக அந்த கும்பலைக் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி ஒரு காவலரை மாறுவேடத்தில் ராஜேஸ்வரியிடம் அனுப்பினர். ராஜேஸ்வரி முதல் கட்டமாக ரூ. 10 ஆயிரம் தந்தால்தான், சிறுமியைப் பார்க்க முடியும் எனத் தெரிவித்தாராம்.

    அந்தக் காவலர் ரூ. 10 ஆயிரம் கொடுத்தாராம். உடனே ராஜேஸ்வரி, செந்தமிழ் அரசு ஆகியோர் சிறுமியை அடைத்து வைத்திருக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது மாறுவேடத்தில் அங்கு இருந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் ராஜேஸ்வரி, செந்தமிழ் அரசு, சிறுமியின் தாயார் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் சிறுமியை அங்கிருந்து மீட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. செந்தமிழ் அரசு திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், இதற்குச் சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இயக்குநர் செந்தமிழ் அரசு, சிறுமியின் தாயாருக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்திருப்பதும், ஓர் ஆண்டாக இந்தக் கும்பல் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து மீட்கப்பட்ட சிறுமியை போலீஸார் அரசு குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai