Enable Javscript for better performance
ஆசிரியையிடம் வழிப்பறி செய்தவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியையிடம் வழிப்பறி செய்தவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்

    By dn  |   Published on : 28th January 2015 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pardon

    சென்னை துரைப்பாக்கத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த வழக்கில், முக்கிய எதிரி தனது தவறை உணர்ந்து ஆசிரியை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

    துரைப்பாக்கம் எம்.சி.என். நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை வேலத்திடம், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

    இந்த நிகழ்வை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவி, தனது செல்போன் கேமரா மூலம் பதிவு செய்தார். அந்த மாணவி, அதை வாட்ஸ் அப் மூலம் தனது தோழிகளுக்கு அனுப்பினார். தோழிகள் தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பினர். இவ்வாறு அந்தக் காட்சி சென்னை நகரம் முழுவதும் பரவியது.

    இதன் விளைவாக துரைப்பாக்கம் போலீஸார் அந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.

    குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் வேலத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டியது தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்த ரெளடி நீராவி முருகன் என்பதும், மோட்டார் சைக்கிள் ஓட்டியது தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.

    இதில் ஹரிகிருஷ்ணனை போலீஸார் உடனடியாக கைது செய்தனர். முக்கிய எதிரியான நீராவி முருகன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், நீராவி முருகன் திருநெல்வேலியில் போலீஸாரிடம் சில நாள்களுக்கு முன்பு சிக்கினார்.

    பிடிபட்ட முருகனை போலீஸார் விசாரணை செய்வதற்கு சென்னைக்கு அழைத்து வந்தனர். ரகசிய இடத்தில் முருகனிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.

    காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்: இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற இடமான எம்.சி.என். நகர் 10-ஆவது தெருவுக்கு நீராவி முருகனை தெற்கு மண்டல இணை ஆணையர் அருண், அடையாறு துணை ஆணையர் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் அழைத்து வந்தனர்.அங்கு வழிப்பறி செய்தது குறித்து முருகன் நடித்துக் காட்டினார். இது குறித்து தகவலறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு குவிந்ததனர்.

    பாதிக்கப்பட்ட ஆசிரியை வேலம் அங்கு அழைத்து வரப்பட்டார். அவர், சம்பவத்தில் ஈடுபட்டது நீராவி முருகன்தான் என்பதை உறுதி செய்தார். அப்போது திடீரென நீராவி முருகன், அங்கு நின்றுகொண்டிருந்த வேலத்தின் காலில் விழுந்து, தனது தவறை மன்னிக்குமாறு கேட்டார். இதைப் பார்த்த வேலம் செய்வதறியாது திகைத்தார்.

    இதைக் கவனித்த போலீஸாரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். நிலைமையை உணர்ந்த போலீஸார், நீராவி முருகனை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட நபர், பொதுமக்கள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டது அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai