Enable Javscript for better performance
ஜன.31-இல் கொள்முதல் நிறுத்தப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்ற, இறக்க காலங்களில் இழப்பு ஏற்படாமல் இருக்க மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வருகிற 31-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி, பொதுச் செயலர் எம்.ஹதர்அலி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் தங்களது சில்லறை விற்பனை நிலையங்களில், பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி, 30 அல்லது 31-ஆம் தேதிகளில் விலை மாற்றத்தை செய்து வருகின்றனர்.

    தற்போது சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. இதனால், கடந்த 2014 ஆகஸ்ட் முதல் 2015 ஜனவரி 16-ஆம் தேதி வரை பெட்ரோலுக்கு 10 முறையும் (மொத்தம் ரூ.16.25), டீசலுக்கு 5 முறையும் (மொத்தம் ரூ.11.48) விலை குறைப்பு செய்துள்ளனர்.

    இந்த விலை குறைப்பால் பெட்ரோலிய விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள பெட்ரோலியப் பொருள்களால் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே விலை ஏற்ற, இறக்க காலங்களில் இருப்பு சரக்கின் மதிப்பில் இழப்பு ஏற்படாமல் இருக்க மாற்று வழியை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்ட போராட்டமாக வருகிற 31-ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றனர்.

    பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும்

    தமிழகத்தில் உள்ள 4470 பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள 150 விற்பனை நிலையங்களில் ஜனவரி 31-ஆம் தேதி வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும். இதற்காக சரக்கு இருப்பு வைக்க பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், அன்றைய தினம் தட்டுப்பாடு ஏற்படாது என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai