Enable Javscript for better performance
தனியார் பால் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.1.45 லட்சம் வழிப்பறி - Dinamani

சுடச்சுட

    

    தனியார் பால் நிறுவன ஊழியரைத் தாக்கி ரூ.1.45 லட்சம் வழிப்பறி

    By dn  |   Published on : 28th January 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையில் தனியார் பால் நிறுவன ஊழியரைத் தாக்கி, ரூ.1.45 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: முகப்பேர் மேற்கு 12-ஆவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் கி.சீனிவாசன் (35). இவர் ஒரு தனியார் பால் நிறுவனத்தின் அண்ணாநகர் பகுதியில் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    சீனிவாசன் தினமும் காலையில் பால் விநியோகம் செய்யப்பட்ட கடைகள், முகவர்களிடம் பணம் வசூலித்து வருவது வழக்கம். அதேபோல செவ்வாய்க்கிழமை காலையில் அவர் முகப்பேர், திருமங்கலம் பகுதியில் பணம் வசூலித்து விட்டு, ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு சைக்கிளில் வந்தார். பாடிக்குப்பம், ரயில் நகர் அருகே வந்தபோது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள் திடீரென சீனிவாசன் வந்த சைக்கிள் மீது மோதினர். இதில் தடுமாறி கீழே சீனிவாசன் விழுந்தபோது, அந்த இளைஞர்கள் சீனிவாசனை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.1.45 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

    இது குறித்து சீனிவாசன், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai