Enable Javscript for better performance
திருவாரூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    மகள், பேரன் கொலை செய்யப்பட்ட நிலையில், தலித்துகள், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி தாக்கல் செய்தவரின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு, திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம், மேலப்பனையூரைச் சேர்ந்த என்.கணேசன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

    தாழ்த்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த எனது மகள் அமிர்தவல்லி, இதர சமூகத்தைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி எனது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து, தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக அவரது குடும்பத்துக்கு எனது மகள் சென்றாள்.

    ஆனால், பழனியப்பனின் சகோதரர் எனது மகள், மருமகன், பேரன் ஆகிய மூவரையும் கொலை செய்தார்.

    இதுதொடர்பாக கடந்த மாதம் கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் பேரில், கொலை வழக்கு, தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்தச் சட்டப்படி, பிரேத பரிசோதனை செய்தவுடன் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இதுவரை வழங்க முன்வரவில்லை.

    எனவே, சட்டப்படி வழங்க வேண்டிய இடைக்கால நிவாரணத் தொகையை வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai