Enable Javscript for better performance
மீரட்டில் கோட்சேவுக்கு சிலை: தடை கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் சிலை நிறுவுவதற்கு நடைபெறும் பணிகளை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்குள் வராது எனவும், நிவாரணம் வேண்டுமெனில் அலகாபாத் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனவும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் கோவிந்தராஜூலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், அகில பாரதிய இந்து மகா சபா சார்பில், மகாத்மா காந்தியை கொலை செய்த நாதூராம் கோட்சேவுக்கு ஜனவரி 30-ஆம் தேதி சிலை நிறுவுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல், நாடு முழுவதும் 17 மாநகரங்களில் கோட்சேவுக்கு சிலை வைக்கப்போவதாக அந்த சபா அறிவித்துள்ளது. இதுபோன்ற செயல் மக்களுக்கு வருத்தமளிக்கிறது. கோட்சேவுக்கு சிலை நிறுவ அனுமதி வழங்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

    எனவே, மீரட்டில் கோட்சேவுக்கு சிலை வைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை நிறுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற அதிகார எல்லைக்குள் மனு வரவில்லை. அதேசமயம், மனுதாரர் நிவாரணம் கோர விரும்பினால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குத் தொடரலாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai