Enable Javscript for better performance
வங்கி ஊழியர் நியமன முறைகேடு: முன்னாள் பொது மேலாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வங்கி ஊழியர் நியமன முறைகேடு: முன்னாள் பொது மேலாளர் கைது

    By dn  |   Published on : 28th January 2015 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் நியமனத்தில் முறைகேடு செய்ததாக, அந்த வங்கியின் ஓய்வு பெற்ற பொது மேலாளரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    இதுகுறித்த விவரம்:

    சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஊழியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கடந்தாண்டு புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர்,

    விசாரணையில், அண்மையில் அந்த வங்கியில் தேர்வு செய்யப்பட்ட 950 தகவலாளர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் போலி சான்றிதழ், லஞ்சம் மூலம் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இந்தப் பணியிடங்களுக்கு அடிப்படைத் தகுதி 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று விதி உள்ளது. இதற்காக அந்த வங்கியின் சில தொழிற்சங்க நிர்வாகிகள், 10-ஆம் வகுப்பு படிக்காதவர்களை, படித்தவர்கள்போல போலி சான்றிதழைப் பெற்று பணி நியமனம் செய்திருப்பதும், அதற்காக லஞ்சம் பெற்றிருப்பதும் தெரியவந்தது.

    இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த வங்கியின் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 8 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எல். பாலசுப்பிரமணியத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அடுத்த கட்ட நடவடிக்கையாக, அந்த வங்கியில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவீந்திரகுமார் காந்தியை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் பணி நியமன முறைகேடு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் பல மணிநேரம் விசாரித்தனர்.

    இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai