Enable Javscript for better performance
பழம் பெரும் நடிகையிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகை திருட்டு: திருச்சி இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழம் பெரும் நடிகையிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகை திருட்டு: திருச்சி இளைஞர் கைது

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை தியாகராயநகரில் பழம் பெரும் நடிகையிடம் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க,வைர நகைகள் திருடப்பட்டது தொடர்பாக திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
     இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தியாகராயநகர் சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் நடிகை ராஜஸ்ரீ (72). இவர் எம்.ஜி.ஆர்.,சிவாஜி ஆகியோர் உள்பட பலருடன் கதாநாயகியாக தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
     ராஜஸ்ரீ, தனது மகன் சீனிவாசனுடன் காரில் செவ்வாய்க்கிழமை தியாகராயநகர் பிரகாசம் தெருவில் உள்ள வங்கி லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை எடுக்க வந்தார். அங்கு தங்க நகைகளை எடுத்த பின்னர், ராஜஸ்ரீ காரில் அமர்ந்திருந்தார். சீனிவாசன் வங்கியில் இருந்தார். அப்போது காரின் அருகே வந்த ஒரு நபர், ராஜஸ்ரீயிடம் காரின் கீழே பத்து ரூபாய் நோட்டுகள் கிடப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட ராஜஸ்ரீ, காரை விட்டு கீழே இறங்கி, அது தனது பணமா என பார்க்க முயன்றார். அப்போது அந்த நபர், காரில் இருந்த ராஜஸ்ரீ வைத்திருந்த நகைப் பையை திருடிக் கொண்டு தப்பியோடினார்.
     இதைப் பார்த்து ராஜஸ்ரீ அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். இதன் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரித்தனர். போலீஸார் விசாரணையில், ராஜஸ்ரீயிடம் நகைப் பையை திருடியது திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த இ.சர்புதீன் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சர்புதீனை வியாழக்கிழமை கைது செய்தனர்.
     கைது செய்யப்பட்ட சர்புதீனிடமிருந்து ராஜஸ்ரீக்குச் சொந்தமான ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் பொருத்தப்பட்ட கைக்கடிகாரம், வைர கைச்சங்கிலி, வைர மோதிரம், வைர கம்மல், 10 பவுன் தங்கச் சங்கிலி, 5 பவுன் டாலர் ஆகியவற்றை பறிமுதல் செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai