Enable Javscript for better performance
கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு- Dinamani

சுடச்சுட

  
  bala1a

  பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா (86) சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.22) காலமானார். அவருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.

  பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் பாலமுரளி கிருஷ்ணா. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி சங்கர குப்தம் என்ற ஊரில் பட்டாபிராமைய்யா - சூரிய காந்தம் தம்பதியருக்கு கடந்த 1930-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி பிறந்தார். சிறுவயதிலேயே இசை மீது கொண்ட ஆர்வம் காரணமாக பாருபள்ளி ராமகிருஷ்ணய்யாவிடம் முறையாக இசை பயின்றார். தனது 6-ஆவது வயது முதல் இசைக்கச்சேரி செய்யத் தொடங்கினார். 9 வயதில் வாய்ப்பாட்டு மட்டுமின்றி மிருதங்கம், வயலின், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்களில் தேர்ச்சி பெற்றார். வானொலியில் முதன்முதலில் அரங்கேற்றம் நடத்தினார். வானொலியில் பக்தி மஞ்சரி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி.என்.பாலசுப்பிரமணியம் போன்ற போன்ற முன்னணி பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.

  25,000-க்கும் மேற்பட்ட...: தொடர்ந்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தென்னிந்தியாவில் அவர் பாடாத சபாக்களே இல்லை. 1967-இல் "பக்த பிரகலாதா' என்ற தமிழ் படத்திலும், "சந்தினே செந்தின சிந்தூரம்' என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். கர்நாடக சங்கீதத்தில் ஏராளமான ராகங்கள் இருந்தாலும் அதன் மூல ராகங்கள் என்று சொல்லப்படும் தாய் ராகங்கள் 72 தான். இந்த 72 மேள கர்த்தா ராகங்களில் கிருதிகள் இயற்றி சாதனை படைத்துள்ளார். வாய்ப்பாட்டு, வாத்தியங்கள் வாசிப்பது, அபூர்வ ராகங்களில் பாடல்கள் இயற்றுவது என பல பரிமாணங்கள் கொண்டவர்.

  சுமூகம் (நான்கு ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு ஸ்வரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ஸ்வரங்கள்), ஓம்காரி (மூன்று ஸ்வரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற பல ராகங்களை உருவாக்கியவர். நடிகர் கமல்ஹாசன், நடிகை வைஜெயந்தி மாலா, இசை ஆராய்ச்சியாளர் டி.எம்.சுந்தரம் உள்ளிட்டோர் இவரிடம் இசை பயின்றுள்ளனர்.

  தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார். திருவிளையாடல் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் "ஒரு நாள் போதுமா', கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்' உள்ளிட்ட இவரது திரையிசைப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

  விருதுகள்

  இந்திய நாட்டின் உயர்ந்த விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளையும், பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான செவாலியே விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

  ஏராளமானோர் அஞ்சலி

  பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், நடிகர் சிவகுமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், பல கர்நாடக இசைக் கலைஞர்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  உடல் இன்று தகனம்

  பாலமுரளி கிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் புதன்கிழமை (நவ.23) நடைபெறுகின்றன. மியூசிக் அகாதெமி, ராதாகிருஷ்ணன் சாலை அருகில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.


  கவிஞர் வைரமுத்து இரங்கல்

  இசைமேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவால் இசை உலகம் தனது கிரீடத்தை இழந்து விட்டது. இசையே வாழ்வு, வாழ்வே இசை என வாழ்ந்த கலைஞன் இசைப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார் என கவிஞர் வைரமுத்து தன து இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
  இசை அவரின் மரபணுக்களோடு கலந்திருந்தது. அவர் தந்தையார் ஒரு புல்லாங்குழல் மேதை, அவர் அன்னையார் ஒரு வீணை இசைக் கலைஞர். புல்லாங்குழலும் வீணையும் கூடிப்பெற்ற குழந்தை அவர்.
  எட்டு வயதில் அரங்கேறியவர், பதினைந்து வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களுக்கும் கீர்த்தனை வடிவம் தந்தவர். சங்கீதம்-சாகித்தியம்-கானம் என்று முக்கூறாய் இயங்கும் இசை என்ற தத்துவம் அவருக்குள் ஒரே புள்ளியில் இயங்கியது.
  அவரது குரல் காற்றை நெசவு செய்யும் குரல், காதுகளில் தேன் தடவும் குரல். கர்நாடக இசையின் மூலம் பண்டிதர்களுக்கு நல்லிசை என்ற அமிர்தம் அளிக்கத் தெரிந்தவர் பாலமுரளிகிருஷ்ணா.
  "ஒரு நாள் போதுமா', "தங்கரதம் வந்தது வீதியிலே', "மெüனத்தின் விளையாடும் மனசாட்சியே' ஆகிய பாடல்கள் இவரது உன்னதக் குரலின் உச்சமாகும்.
  கலையோடு கலந்து விட்டார்: பாலமுரளி கிருஷ்ணா காலமாகவில்லை; கலையோடு கலந்து விட்டார். கலைக்கு மரணம் இல்லை.
  கலையோடு கலந்தவர்களும் மரிப்பதில்லை. காற்றில் நாதம் உள்ள காலம் வரை பாலமுரளிகிருஷ்ணாவின் கானம் மிதந்து கொண்டே இருக்கும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
  தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இசை உலகில் பேரோடும், புகழோடும் வாழ்ந்து மறைந்த சங்கீத கடல் பாலமுரளிகிருஷ்ணா மறைந்த செய்தி அறிந்து மிக்க துயரமுற்றேன்.
  8 மொழிகளில் பாடி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று இசை உலகில் தனக்கென்று தனி இடம் பெற்றவர். அவர் இழப்பு கர்நாடக இசை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

   

  ஆளுநர் வித்யாசாகர் இரங்கல்

  கர்நாடக இசைப் பாடகர் பால முரளிகிருஷ்ணா மறைவுக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-
  கர்நாடக இசைப் பாடகர் பால முரளிகிருஷ்ணாவின் திடீர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் அடைந்தேன். மனதைக் கவரும் அவரது ஆசிர்வதிக்கப்பட்ட குரலால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
  அவர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் தனது அபரிமிதமான இசை ஞானத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார். கர்நாடக இசை உலகத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை பால முரளிகிருஷ்ணா விட்டுச் சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

   

  முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

  பிரபல கர்நாடக இசைப் பாடகர் எம்.பால முரளிகிருஷ்ணாவின் மறைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:-
  பால முரளிகிருஷ்ணா தனது ஆறாவது வயதில் இசைப் பயணத்தைத் தொடங்கினார். கஞ்சிரா, மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளை வசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். கர்நாடக இசையை முறையாகக் கற்று அவர் தனது எட்டாவது வயதில் இசைக் கச்சேரியை நடத்தினார்.
  அன்று முதல் "பால' என்ற அடைமொழியுடன் பால முரளிகிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீ பத்ராசலம் ராமதாஸ், ஸ்ரீ அன்னமாச்சார்யா கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்திய டாக்டர் பால முரளிகிருஷ்ணா தனது தாய்மொழியான தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.
  கலை, பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக விரிவான இசை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எம்.கே.பி. அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியவர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா. இசையில் பல்வேறு ஆராய்ச்சிகளைப் புரிந்தவர்.
  திரைத் துறையில் பால முரளி: திரைத்துறையிலும் காலடி பதித்து, பல திரைப்படங்களுக்குப் பின்னணி பாடியதுடன், பல்வேறு மொழிகளில் 400 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். "பக்த பிரகலாதா' என்ற திரைப்படம் மூலம் நாரதராக நடித்த பால முரளிகிருஷ்ணா, பல்வேறு படங்களில் தனது நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
  விருதுகளின் சொந்தக்காரர்: சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, சுவாதித் திருநாள் விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி, செவாலியே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என பல்வேறு விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா.
  அவரது 75-வது பிறந்த நாள் விழா, செவாலியே விருது பெற்றதற்கான பாராட்டு விழா கடந்த 2005-ஆம் ஆண்டு சென்னையில் நடந்தது. அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசினேன். அப்போது, எனக்காக "ஜெய ஜெய லலிதே' என்ற ராகத்தை அர்ப்பணித்ததும், அதே விழாவில் தமிழக அரசின் சார்பில் கந்தர்வ கான சாம்ராட் என்ற பட்டத்தை வழங்கியதும் இன்றும் எனது மனதில் பசுமையாக உள்ளது.
  இழப்பை ஈடு செய்ய முடியாது: இசைத் துறையில் அளப்பரிய பணியாற்றிய பால முரளிகிருஷ்ணா மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், இசைத் துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கும் மிகப்பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.
  பால முரளிகிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai