Enable Javscript for better performance
ஏடிஎம் அட்டைகள் மாற்றுத்திறனாளிகளிடம் திரும்ப அளிக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    ஏடிஎம் அட்டைகள் மாற்றுத்திறனாளிகளிடம் திரும்ப அளிக்கப்படுமா?

    By DIN  |   Published on : 08th October 2016 04:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    atm

    வங்கி முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஏடிஎம் அட்டைகள், சம்பந்தப்பட்ட பயனாளிகளிடம் திரும்ப அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    இவர்களில், மனநலன் குன்றியவர்கள், மேலும் சில பயனாளிகள் மட்டும் தமிழக அரசின் உதவித் தொகையை நேரடியாக வங்கியிலோ அல்லது ஏடிஎம் மையத்திலோ சென்று எடுத்துக்கொள்ள முடியும்.
    ஆனால், மாற்றுத்திறனாளிகள் உள்பட மற்ற பயனாளிகள் அவ்வாறு நேரடியாக வங்கிக்கோ, ஏடிஎம் மையத்துக்கோ சென்று பணத்தை எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட வங்கி நியமிக்கும் முகவரிடம் மட்டுமே இவர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளும், பிற பயனாளிகளும் தங்களுடைய வங்கி ஏடிஎம் அட்டை, ரகசிய குறியீட்டு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்ட முகவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரும் அந்த முகவரிடம் சென்று, அவர்கள் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    ஏடிஎம் அட்டை உள்ளிட்ட வங்கி விவரங்களை பிறரிடம் ஒப்படைப்பது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பானது என்பதாலும், மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு மாதமும் முகவர் அழைக்கும் இடத்துக்கு எளிதில் செல்ல முடியாது என்பதாலும் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    இதுதொடர்பாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சிம்மச்சந்திரன் புகார் மனுவும் அளித்திருந்தார்.
    இதுதொடர்பான செய்தி "உதவித் தொகை பெற அலைக்கழிக்கப்படும் மாற்றித்திறனாளிகள்' என்ற தலைப்பில், "தினமணி'யில் 28-9-2016 அன்று வெளியானது. இந்தச் செய்தியைச் சுட்டிக்காட்டி, சிம்மச்சந்திரனை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6-10-2016 அன்று, தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) முன்னிலையில் இரண்டரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
    விசாரணையின் முடிவில், சிம்மச்சந்திரனுக்கு மட்டும் ஏடிஎம் அட்டையைப் பெற்றுத் தர உறுதியளித்தனர். ஆனால், மற்ற பயனாளிகளுக்கு ஏடிஎம் அட்டையைத் திரும்ப ஒப்படைப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும்.
    மேலும், பயனாளிகள் முகவரிடம் ஏடிஎம் அட்டையை ஒப்படைக்க வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு இல்லை. இது சம்பந்தப்பட்ட வங்கியின் உத்தரவு எனத் தெரிவித்தனர்.
    இந்த நிலையில், அதிகாரிகள் உறுதியளித்தபடி சம்பந்தப்பட்ட வங்கி தனது முகவரை வெள்ளிக்கிழமை வரவழைத்து ஏடிஎம் அட்டையைப் பெற்று, சிம்மச்சந்திரனிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
    அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு, எனது ஏடிஎம் அட்டையை மட்டும் முகவரிடமிருந்து பெற்றுத் தந்துள்ளனர். இதன்மூலம், எனது உதவித் தொகையை இனி நானே ஏதாவது ஒரு ஏடிஎம் மையத்துக்குச் சென்று எடுத்துக்கொள்ள முடியும்.
    இதுபோல, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும் ஏடிஎம் அட்டைகளை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அரசின் உதவித் தொகை சிரமமின்றியும், முழுமையாகவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
    ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி, தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
    அதுபோல், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளும் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 6 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறையோ குறிப்பிட்ட வருவாய் அதிகாரி முன்னிலையில் நேரடியாக ஆஜராகும் வகையில் நடைமுறையைக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai