Enable Javscript for better performance
பூக்கடை பகுதி நடைபாதை மீண்டும் ஆக்கிரமிப்பு: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    பூக்கடை பகுதி நடைபாதை மீண்டும் ஆக்கிரமிப்பு: காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

    By DIN  |   Published on : 08th October 2016 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை பூக்கடை முதல் பாரிமுனை வரை நடைபாதைகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
    சென்னை மாநகரில் ஏராளமான உணவகங்களில் (ஹோட்டல்) வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லை. இதனால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்கள், சாலைகளை மறித்து வெளியே நிறுத்தப்படுகின்றன. இதன் விளைவாக அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. உயர் நீதிமன்றம் அருகே பூக்கடை, என்.எஸ்.சி.போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து எடுத்த புகைபடங்களை, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர், நீதிபதிகள் முன் சமர்ப்பித்தார். மேலும் அவர், நடைபாதைகளில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், தான் சென்றபோது அவற்றை வேகமாக அகற்றியதாகவும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்ததாகவும் தெரிவித்தார்.
    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: போலீஸ் அதிகாரிகளின் ஆசியுடன் இந்த ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. தற்போது அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய அதிகாரிகள் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர். ஆகையால், கூடுதல் ஆணையர் (போக்குவரத்து) புதிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க நீதிமன்ற அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வர். அப்போது தான் உண்மையான நிலை தெரியவரும் எனக் கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 14 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai