Enable Javscript for better performance
லாட்டரி வழக்கில் ஒரே நாளில் ஜாமீன் வழங்கியதாக புகார்: பெண் நீதிபதியிடம் விசாரணை நடத்த முடிவு?- Dinamani

சுடச்சுட

    

    லாட்டரி வழக்கில் ஒரே நாளில் ஜாமீன் வழங்கியதாக புகார்: பெண் நீதிபதியிடம் விசாரணை நடத்த முடிவு?

    By DIN  |   Published on : 08th October 2016 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாட்டரிகளை விற்றவர்களுக்கு ஒரே நாளில் ஜாமீன் வழங்கியதாக எழுந்த புகார் தொடர்பாக, பெண் குற்றவியல் நடுவர் மீது நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்துவது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வதற்கு பரிந்துரைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரியில் சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரிகளை பதுக்கி விற்றதாக, பாலகோபாலன், செந்தில்குமார், மொத்த விநியோகஸ்தர் ரவிக்குமார் ஆகியோரை ஜூலை 7-இல் போலீஸார் கைது செய்தனர்.
    இந்த நிலையில், ரவிக்குமார் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை புதுச்சேரி 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்தது.
    இந்த நிலையில், 3-ஆவது முறையாக ஜாமீன் மனு ஆகஸ்ட் 3-இல் 2-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    அப்போது, அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோதும், அரசு தரப்பில் ஜாமீன் தர எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்று கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி பெண் குற்றவியல் நடுவர் (பொறுப்பு) உத்தரவிட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஜாமீன் உத்தரவால் சம்பந்தப்பட்ட அரசு தரப்பு வழக்குரைஞர் மீது துறைவாரியான விசாரணையும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
    இதைத் தொடர்ந்து, ரவிக்குமாருக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை கடந்த ஆகஸ்டு 29-ஆம் தேதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்தது.
    இந்த உத்தரவை எதிர்த்து ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு:-
    ரவிக்குமாரின் பின்புலத்தை ஆராய வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறி, அவருக்கு ஜாமீன் தரக்கூடாது என அரசு தரப்பும், போலீஸாரும் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர். ரவிக்குமாரின் ஜாமீன் மனுவை சம்பந்தப்பட்ட 1-வது குற்றவியல் நடுவர் ஏற்கெனவே 2 முறை தள்ளுபடி செய்துள்ளார். அவர் விடுப்பில் சென்ற நேரம் பார்த்து, அவருடைய நீதிமன்றத்துக்கு பொறுப்பு வகித்த பெண் நீதிபதி அரசு தரப்பு ஆட்சேபத்தையும் மீறி, பொய்யாக பதிவு செய்து ஜாமீன் வழங்கியுள்ளார்.
    சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் விடுப்பில் சென்றால், பொறுப்பு வகிக்கும் மற்றொரு குற்றவியல் நடுவர், வழக்கை தள்ளி வைப்பது தான் சிறந்ததாக இருக்கும்.
    இதுதொடர்பாக உயர்நீதிமன்ற ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்துவது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்ய இந்த வழக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
    மேலும், ரவிக்குமாரின் ஜாமீனை ரத்து செய்து, புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சரியான உத்தரவைத்தான் பிறப்பித்துள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai