Enable Javscript for better performance
ஆலந்தூர் - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் தொடக்கம் !- Dinamani

சுடச்சுட

    

    ஆலந்தூர் - பரங்கிமலை இடையே 1.286 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கியது. இதற்காக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை காலை பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.
    கோயம்பேடு- ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை 2015 ஜூன் மாத இறுதியில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கோயம்பேடு, புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி), அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய பகுதிகளை இந்த மெட்ரோ ரயில் சேவை இணைத்தது.
    மேலும், 2 ஆவது கட்டமாக சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. உயர்நிலைப் பாதை, சுரங்கப்பாதை வழியாக இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    இதன் அடுத்தகட்டமாக ஆலந்தூரில் இருந்து பரங்கிமலை வரையிலான 1.286 கி.மீ. தூரத்துக்கு ரயில் சேவை வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
    கட்டணம் ரூ.40: கோயம்பேடு - பரங்கிமலை செல்வதற்கு கட்டணமாக ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.
    இந்த புதிய சேவை தொடங்கப்பட்டதையடுத்து கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பரங்கிமலைக்கு செல்ல முடியும். ஆலந்தூரில் ஏறி, இறங்க தேவையில்லை.
    மின்சார ரயில் பயணிகளை மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    முக்கியப் பகுதிகள் இணைப்பு: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை, வேளச்சேரி பகுதி மக்கள் எளிதாக கோயம்பேடுக்கு செல்ல முடியும்.
    மேலும் வெளியூரில் இருந்து வரும் ரயில் பயணிகளும் பரங்கிமலை நிலையத்தில் இறங்கி மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடுக்கு எளிதாகச் செல்லலாம்.
    நேரடி சேவை தேவை: விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு செல்ல ஆலந்தூரில் இறங்கி நடைமேடை மாற வேண்டிய சூழல் உள்ளது.
    கோயம்பேட்டில் இருந்து நேரடியாக விமான நிலையம் செல்வதற்கான திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் கோயம்பேடு - விமான நிலையம் செல்வதற்கு நேரடி சேவை அமைந்தால் இந்த உயர் நிலை மெட்ரோ ரயில் திட்டம் அனைவரிடமும் சென்று சேரும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai