Enable Javscript for better performance
குடிநீர் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும்: ஆவடி நகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும்: ஆவடி நகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 15th October 2016 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் இணைப்புகளை விரைந்து வழங்குதற்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என ஆவடி நகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதுதொடர்பாக ஆவடியைச் சேர்ந்த பாபு கணேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:
    குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்துக்காக, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்தின் கீழ், ஆவடி நகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டிய திட்டம் முடிக்கப்படவில்லை.
    இதை கண்டித்து 2009-இல் போராட்டமும் நடைபெற்றபோது, திட்டப் பணிகள் 77 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் புழல் ஏரியில் இருந்து ஆவடிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், குடிநீர் இணைப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை' என்று கூறியிருந்தார்.
    இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
    இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, "குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும், ஒரு வாரத்தில் மட்டும் 100 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதத்துக்குள் ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படும்' என்று ஆவடி நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
    குடிநீர் இணைப்புகள் கோரி, சுமார் 18 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஆயிரம் இணைப்புகள் வழங்க முடியும் என்றால், 18 ஆயிரம் இணைப்புகள் வழங்க 18 மாதங்களாகும். 7 ஆண்டுகளாக திட்டப் பணிகள் நடைபெற்றும், குடிநீர் இணைப்புகளை விரைந்து வழங்குவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். இதற்கு மேல் காலதாமதம் ஏற்படக் கூடாது. இந்த விவகாரத்தை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai