Enable Javscript for better performance
விசாரணையில் உயிரிழந்த வியாபாரியின் உடலை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    விசாரணையில் உயிரிழந்த வியாபாரியின் உடலை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 15th October 2016 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வியாபாரியின் உடலை இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இதுகுறித்து தமிழ்நாடு பான் பீடா, ஜர்தா வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:-
    அரசு அனுமதி பெற்றே "பான் பீடா' தொழில் புரிந்து வருகிறோம். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 100 மீட்டர் சுற்றளவில் பீடி, சிகரெட், புகையிலை, நிகோடின் கலந்த பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை காவல் துறை தவறாகப் புரிந்து கொண்டு, அரசு அனுமதியுடன் பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், போலீஸார் ஆய்வு மேற்கொள்ளவோ அல்லது பொருள்களை கைப்பற்றவோ அதிகாரம் கிடையாது. ஆனால், போலீஸார் தங்களது கடைகளில் அத்துமீறி நுழைந்து, சோதனை என்கிற பெயரில் பொருள்களை கைப்பற்றி சாலையில் வீசுகின்றனர். மேலும், வியாபாரிகளை சட்ட விரோத காவலுக்கும் உட்படுத்துகின்றனர்.
    இதே போன்று, மணலியில் பான் மசாலா கடை நடத்திய ஸ்ரீகாந்த் என்கிற பாலாஜியை, கடந்த 3-ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் போலீஸார் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரது கைது தொடர்பாக, குற்றவியல் நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, சுமூகமாக தொழில் புரியும் வகையில் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
    இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன் போலீஸ் விசாரணையில் இருந்த ஸ்ரீகாந்த் திடீரென உயிரிழந்தார்.
    இந்த நிலையில் இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த ஸ்ரீகாந்த் பாலாஜியின் உடலை பரிசோதனை மேற்கொள்வதற்கு, இரண்டு மருத்துவர்களை நியமிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai