Enable Javscript for better performance
3 மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: தலைவர்கள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    3 மாணவிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம்: தலைவர்கள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த கல்லூரி மாணவிகள் மூவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
    சென்னை கிண்டியில் செல்லம்மாள் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் கல்லூரியை நோக்கி வியாழக்கிழமை சாலையில் நடந்து வந்தபோது, தண்ணீர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
    லாரி ஓட்டுநர் மது அருந்தியிருந்ததும், லாரி பிரேக் பிடிக்காததுமே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுவது தொடர்பாக விசாரணை நடத்தி, இந்த விபத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
    மேலும், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
    மு.க.ஸ்டாலின்: எதிர்காலக் கனவுகளுடன் கல்விக் கற்றுக் கொண்டிருந்த மாணவிகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை.
    சாலையில் நடப்பவர்கள், இரு சக்கர வாகனகத்தில் செல்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானது. குறிப்பாக கல்லூரிகள், பள்ளிகள் இருக்கும் இடங்களில் மாணவர்கள் இறங்கி கல்வித் தலத்துக்குச் செல்வதற்கு வசதியாக பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு இருக்கிறது. எனவே, போக்குவரத்து போலீஸாரும், போக்குவரத்துக்கு கழகமும் இணைந்து இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
    ஜி.கே.வாசன்: கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. லாரியை ஓட்டியவர் மீது குற்றம் இருப்பின் தமிழக அரசு அவரைச் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவையான தண்ணீரைக் கொண்டு செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதைத் தடுக்க அவற்றில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai