வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கான திட்டங்களைத் தயாரிக்க காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கான திட்டங்களைத் தயாரிக்க காவல்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி, காவல்துறை துறை கூடுதல் டிஜிபி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விவரம்: அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலமாகும். பருவமழையின்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள், புயல் போன்றவை உருவாகி கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அந்தச் சமயத்தில் பொதுமக்களுக்கும், அவர்களின் உடமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர். அந்தக் குழுவில் காவல்துறை கண்காணிப்பாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு பெருவெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினருக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பருவமழையின்போது தயார் நிலையில் இருக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் காவல்துறையினர் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின்படி காவல்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளைக் கொண்டு எத்தகைய பேரிடரையும் கையாளும் வகையில் ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு சிறப்பு காவல்துறை உள்ளிட்ட சிறப்புப் படையினரைப் பயன்படுத்தி பேரிடரைக் கையாள்வதற்குத் தகுந்த காவல்துறை பணியாளர்களை நியமிக்க வேண்டும். இந்தப் பணியாளர்களுக்கு மீட்புப் பணிகள், பேரிடர் நிகழ்ந்த இடங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்துதல், ஜன நெருக்கடியைச் சமாளித்தல், நிவாரணப் பணிகளில் உதவி செய்தல் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும். மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து பேரிடர் தடுப்பு தயார்நிலை குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தப் பகுதிகளில் அவசர மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் உடனடியாக நடைபெறும் வகையில் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறுகிய கால அவகாசத்தில் மீட்புப் பணிகளுக்கு செல்லும் வகையில் அதிகாரிகளும், பணியாளர்களும் எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
வானிலை முன்னெச்சரிக்கை கணிப்புகள் மற்றும் கள நிலவரம் குறித்த தொடர் எச்சரிக்கைகளை அளிக்கும் வகையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறை மாவட்ட அவசர செயல்பாடுகள் மையத்தோடு இணைப்பில் இருக்க வேண்டும். மாவட்ட அவசர செயல்பாடுகள் மையத்தில் மூத்த காவல்துறை பணியாளர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், பணியாளர்களைத் எளிதில் தொடர்பு கொள்ளும் தகவல்தொடர்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
பருவமழையின்போது பயன்படுத்தும் கருவிகள், உபகரணங்களின் இருப்பு குறித்த பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். கருவிகள், உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, இயங்கும் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையின் அனைத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்குத் தேவையான வாகனங்களும் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
மீட்புப் படையினர் மற்றும் உபகரணங்கள் அவசர மீட்புப் பணிகளுக்கு எளிதில் விரைந்து செல்லும் வகையிலான போக்குவரத்துத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, போக்குவரத்து, ஆபத்துகளைக் முறையாகக் கையாள வேண்டும். பேரிடரின்போது உடனடித் தேவைகளுக்கு உதவும் வகையில் அந்தந்தப் பகுதியைச் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களைத் திரட்ட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com