சென்னை கோயம்பேட்டில் தனியார் ஆம்னி பேருந்தை கத்திமுனையில் கடத்தி கொள்ளையடிக்க முயன்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கோயம்பேட்டில் இருந்து கோவைக்கு புதன்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தின் ஓட்டுநராக மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் ஜோதிராஜ் (58) என்பவர் இருந்தார். பயணிகளை ஏற்றியதும்,பேருந்தை ஜோதிராஜ் எடுக்க முயன்றார். அப்போது அந்த பேருந்துக்குள் 5 பேர் அவசரமாக ஏறினர். அவர்களில் ஒரு நபர், ஜோதிராஜின் கழுத்தில் திடீரென கத்தியை வைத்து,பேருந்தை தாங்கள் சொல்லுமிடத்துக்கு ஓட்டும்படி கூறினார்.
அதன்படி பேருந்தை ஓட்டிய ஜோதிராஜ், சிறிது தூரம் சென்றதும் சமயோஜிதமாக திடீரென பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். கடத்தல் கும்பல், நிலைமையை உணருவதற்குள் ஜோதிராஜ், தனது இருக்கையின் அருகே உள்ள கதவைத் திறந்து வெளியே குதித்து பேருந்தில் கொள்ளைக் கும்பல் இருப்பது குறித்து சத்தம் போட்டார்.
உடனே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஆம்னி பேருந்தை நோக்கி ஓடி வந்தனர். அதேநேரத்தில் பேருந்துக்குள் இருந்த நபர்கள், தங்களது முகத்தை மூடிக் கொண்டு பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடினர். அப்போது அங்கு ரோந்து வந்த போலீஸார், ஒரு நபரை பிடித்தனர். மீதி 4 நபர்களும் தப்பியோடினர்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர், திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரும்பாக்கம் போலீஸார் அவரைக் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். தப்பியோடிய தினேஷின் கூட்டாளிகள் கணேசன் உள்பட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பேருந்தை கடத்தி கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.