நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்து கொண்டே இருக்கும்: கவிஞர் வைரமுத்து

கவிஞர் நா.காமராசனின் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்து கொண்டே இருக்கும்: கவிஞர் வைரமுத்து
Updated on
1 min read

கவிஞர் நா.காமராசனின் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
கவிஞர் நா.காமராசன் (74) உடல்நலக் குறைவால் சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார். சென்னை கோடம்பாக்கம், கங்கா நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
நா.காமராசன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியது: கவிஞர் நா.காமராசன் திராவிடப் பண்ணையில் முளைத்தவர். ஹிந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் தன்னை அடையாளப்படுத்தியவர். மதுரையில் காளிமுத்துவோடு சட்டத்தை எரித்துச் சிறை சென்றவர். சூரிய காந்தி என்ற மரபுக் கவிதையில் தொடங்கிய அவரது எழுத்துப் பயணம் கருப்பு மலர்கள் என்ற புரட்சிக் கவிதையில் சென்று முடிந்தது.
ஒரு தீவிரமான புதுக்கவிஞனுக்குத் திரைப்பாட்டு எழுத வராது என்ற பழைய நம்பிக்கையை உடைத்தவர் நா.காமராசன்.
போய்வா நதி அலையே - ஏழை
பூமிக்கு நீர் கொண்டுவா
- என்ற அவரது பாட்டு காதலிலும்கூட ஏழைகளையே கனவு கண்டது.
நிர்வாணத்தை விற்கிறோம்
ஆடை வாங்குவதற்காக
- என்று பால்வினையாளிகளைப் பற்றி எழுதிய கவிஞன்
வால் முளைத்த மண்ணே - என்று புல்லைப் பற்றி எழுதிய கவிஞன்...
புயலைக் கடலின் வேட்டை நாய்
}என்று எழுதிய கவிஞன்...
இனிமேல் இங்கு நேசிப்பதற்கு என்ன இருக்கிறது
ஆஸ்துமா மாத்திரைகளைத் தவிர
- என்ற கவிதை வரியோடு தன் காலத்தை முடித்துக்கொண்டார்.
அவர் கவிதைகள் அழியாதவை: அவருடைய கவிதைகளை திமுக தலைவர் மு.கருணாநிதி வாழ்த்தினார் அவருடைய பாடல்களை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆதரித்தார். இப்படி இருபெரும் ஆளுமைகளாலும் வளர்க்கப்பட்டவர் இன்று எழுதுவதை நிறுத்திக்கொண்டார். இந்த உடம்பு அழியப் பிறந்தது. அழியும் உடம்பிலிருந்து அழியாததைச் செய்கிறவனே மரணத்தை வெற்றி கொள்கிறான். அவர் கவிதைகள் அழியாதவை.
நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பார்த்தார்க்கும் இலக்கிய உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் வைரமுத்து.
மு.க.ஸ்டாலின் அஞ்சலி: கவிஞர் நா.காமராசன் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர்கள் முத்துலிங்கம், ஈரோடு தமிழன்பன், இளைய கம்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று இறுதிச் சடங்கு: அவரது உடல் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு போடி மீனாட்சிபுரம் அருகில் உள்ள போ.தர்மத்துப்பட்டி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிராம மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பின் போ.தர்மத்துப்பட்டி இடுகாட்டில் வெள்ளிக்கிழமை(மே 26) காலை 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com