டெங்கு தடுப்புப் பணியில் 2,845 பணியாளர்கள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியில் 2,845 மலேரியா பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணியில் 2,845 மலேரியா பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
டெங்கு தடுப்புப் பணியில் 2,845 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் 586 கைத்தெளிப்பான் மற்றும் 245 சிறிய அளவிலான இயந்திரத்தைக் கொண்டு புகை பரப்பும் பணி நடைபெற்று வருகிறது. 
மேலும் 39 வாகனங்களின் மூலம் புகை பரப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 3 புகைப் பரப்பும் இயந்திரங்கள் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு மண்டலத்திலும் மருத்துவமனைகளிலிருந்து தினசரி காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு உடன் அனுப்பப்படுகின்றன. பிறகு அந்தந்த மண்டலங்களில் உள்ள மண்டல நல அலுவலர், பூச்சியியல் வல்லுநர், துப்புரவு அலுவலர், சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இந்தியமுறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலைவேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உணவகங்களிலும், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்களை கொண்டு பள்ளி இறைவணக்கத்தின் போது டெங்கு விழிப்புணர்வு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. 
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த கொசுப்புழுக் கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது.
மேலும் மழைக்காலம் முடிந்ததும் நீர்தேக்கங்களில் தேங்கியுள்ள நீரில் கொசுப்புழுக்களை உண்ணக்கூடிய மீன் வகையை விட்டு, கொசுப்புழு உற்பத்தியை இயற்கை முறையில் தடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தினமும் தட்பவெப்ப நிலைக்கேற்ப மற்றும் பருவநிலை மாறுபாட்டிற்கேற்ப கொசுக்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்த தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தா.கார்த்திகேயன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com