Enable Javscript for better performance
சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோலாக மாணவிகள் இருக்க வேண்டும்: விஐடி வேந்தர் விசுவநாதன்- Dinamani

சுடச்சுட

    

    சமூக மாற்றத்திற்கான ஊன்றுகோலாக மாணவிகள் இருக்க வேண்டும்: விஐடி வேந்தர் விசுவநாதன்

    By DIN  |   Published on : 22nd October 2017 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    convocation

    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்கிய விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன். உடன், கல்லூரி நிர்வாகக் குழு தலைவர் வி.எம்.முரளிதரன், ம

    சமூக மாற்றத்துக்கான ஊன்றுகோலாக மாணவிகள் இருக்க வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.
    சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஜி.விசுவநாதன் இளநிலை, முதுநிலை, ஆய்வு நிறைஞர் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பட்டங்களையும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருது, பரிசுகளையும் வழங்கி பேசியது: 
    நாட்டில் உள்ள 128 கோடி மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் தான் பட்டம் பெற்றவர்கள். சங்க காலத்தில் ஒளவையார், காரைக்கால் அம்மையார் உள்பட 57 பெண் கவிஞர்களே இருந்தனர். அவர்களுக்கு கல்வி உள்பட அனைத்திலும் சம உரிமை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை நீடிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. 
    பெண்களுக்கான கல்வி உரிமையில் சம உரிமை இல்லாத நிலையே காணப்படுகிறது. 2011 கணக்கின்படி நாட்டில் கல்வி பெறும் மாணவ-மாணவிகளின் மொத்த சதவீதம் 73. இதில் 82 சதவீதம் ஆண்களும், 62 சதவீதம் பெண்களும் ஆவர். சுதந்திரத்திற்கு பின்னர் பல சட்டங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
    குழந்தைத் திருமணம் தடுப்பு, வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் போன்ற பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அவை அத்தனையும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. 100 பெண்களில் ஒரு பெண் குழந்தையே 12 வகுப்பு வரை செல்லும் அவலம் இன்றும் நீடிக்கிறது. எஞ்சிய பெண் குழந்தைகள் பல காரணங்களுக்காக கல்வியைத் தொடர முடியாத சூழலே உள்ளது.
    2010-11-கணக்கெடுப்பின்படி பள்ளிக் கல்வியில் 58.5 சதவீத ஆண்களும், 41.5 சதவீத பெண்களும் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. 
    ஆண்-பெண் என்ற பாலின வேறுபாட்டில் இன்றளவும் சமமின்மையே நிலவுகிறது. உலக நாடுகளில் இந்தியா இதில் முன்னணியில் உள்ளது. 
    நோபல் பரிசு பெற்றவர்களில் பெண்கள் மிகக்குறைவே. அதிலும் இந்தியாவிலிருந்து ஒருவரே பெற்றுள்ளார். இந்த நிலை மாற வேண்டும். பாலின வேறுபாடுகளைக் களைந்து சமூக மாற்றத்துக்கான ஊன்றுகோலாக பெண்கள் திகழ வேண்டும். வரும் ஆண்டில் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, மேல்நிலை ஆகிய பிரிவில் விருது வழங்கப்படும் என்றார் விசுவநாதன்.
    இந்த நிகழ்ச்சியில் எத்திராஜ் கல்லூரி தலைவர் வி.எம்.முரளிதரன், முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai