திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் புதன்கிழமை மாலை வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி அண்ணாமலை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவுக்கு எங்களது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அனைத்து திரையரங்குகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை வரை அனைத்துக் காட்சிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்: முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கோயம்பேடு சந்தை மூடப்படும் என்றும், காய்கறிகள், பழங்கள் விற்பனை புதன்கிழமை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்து சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.