காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தங்கச்சிலை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 2015ஆம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலையும், ஏலவார்குழலி சிலையும் புதிதாக செய்யப்பட்டன. இச்சிலைகளைச் செய்ய 8.75 கிலோ தங்கம் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் சிலைகளுக்குத் தங்கத்தைப் பயன்படுத்துவதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்தபதி முத்தையா பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இந்துசமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த ஜூலை 31ஆம் தேதி கைது செய்தனர்.
இதனையடுத்து கூடுதல் ஆணையர் கவிதா சார்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் ஆணையர் கவிதாவை கைது செய்ததற்கான ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஐயப்பராஜ் தாக்கல் செய்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், கூடுதல் ஆணையர் கவிதா திருச்சியில் 30 நாள்கள் தங்கியிருந்து, கும்பகோணம் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.