காவலரைத் தாக்கிய வழக்கு: குற்றவாளியை கைது செய்ய சமூக ஊடகங்களில் புகைப்படம் வெளியீடு

சென்னை சேப்பாக்கத்தில் காவலரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்ய, தொடர்புடைய நபரின் புகைப் படத்தை காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் காவலரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்ய, தொடர்புடைய நபரின் புகைப் படத்தை காவல்துறை சமூக ஊடகங்களில் வெளியிட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தால், அது போராட்டத்தின் கவனத்தை திசை திருப்பும் எனக் கருதி, அந்த போட்டியை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 
தடையை மீறி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த 10-ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது சிலர், போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். 
இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்து, நாம் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். அதேவேளையில் போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலைக் காவலர் செந்தில்குமாரை தாக்கிய இளைஞர் இன்னும் அடையாளம் காணப்படாமலும், கைது செய்யப்படாமலும் உள்ளார்.
புகைப்படம் வெளியீடு:
இப்போராட்டத்துக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்ததால், அந்த இளைஞரை அடையாளம் காணுவதில் போலீஸாருக்கு குழப்பம் நீடிக்கிறது. இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட இளைஞரைப் பற்றி தகவலை திரட்டும் வகையில் காவலரை தாக்கிய அந்த இளைஞரின் புகைப்படத்தை கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை உள்ளிட்டவற்றில் சென்னை காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்டது.
இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பார்ப்பவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில், விரைவில் அவரை கைது செய்வோம் என சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com