Enable Javscript for better performance
காற்று மாசைக் கண்டறிய நடமாடும் கண்காணிப்பு நிலையம்- Dinamani

சுடச்சுட

    
    air-pollution

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கிய தண்ணீர் கண்காட்சியைப் பார்வையிடும் மாணவிகள்.

    காற்று மாசைக் கண்டறிய ரூ.24 கோடியில் நடமாடும் கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "வாட்டர் எக்ஸ்போ 2018' தலைப்பில் வாட்டர் டுடே இதழ் சார்பில் புதுமையான சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்து பேசியது:
    தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மூலம் 100 சதவீதம் பயன் கிடைத்து வருகிறது. இத்திட்டத்தை உலகமே வியந்து பாராட்டியுள்ளது. நீர், காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.
    தமிழகத்தில் கழிவு நீரை அகற்ற பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 45 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் மாசடைவதை தடுக்கவும், தரம் குறித்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆறுகளில் நீரின் தரத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். காற்று மாசு குறித்து கண்டறிய நடமாடும் கண்காணிப்பு நிலையம் ரூ.24 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம், எந்தெந்த இடத்தில் காற்று மாசு அதிகம் உள்ளதோ அங்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் கருப்பணன்.
    275 அரங்குகள்: சனிக்கிழமை (பிப்.10) வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 275 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். எதிர்காலத்தில் வரவுள்ள புதிய தொழில்நுட்பங்கள், சாதனங்கள், தானியங்கி சேவைகள், தண்ணீர் நிர்வாகம் மற்றும் தண்ணீரைப் பாதுகாக்கும் முறைகளை அவர்கள் பார்வையாளர்களுக்கு விளக்கவுள்ளனர்.
    கண்காட்சியை காலை 10 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai