Enable Javscript for better performance
சுட்டுரையில் ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு: சைபர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    சுட்டுரையில் ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு: சைபர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் சுட்டுரையில் (ட்விட்டர்) போலி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     மு.க.ஸ்டாலின் சார்பில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், என்னுடைய பெயரில் சுட்டுரையில் சில மர்ம நபர்கள் போலியாக கணக்கு தொடங்கியுள்ளனர். இந்த பக்கத்தில் நான் சொல்லாத கருத்துக்களை நான் சொன்னது போலவும், பிரிவினையை உண்டாக்கக்கூடிய வகையிலும் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. திமுக மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், எனக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தீய எண்ணத்துடன் இந்த விஷமச் செயலை செய்கின்றனர். எனவே, இச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
     இந்த புகாரை விசாரணை செய்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த கணக்கை தொடங்கியவர்கள், அதை இயக்குபவர்கள் குறித்த தகவல்களை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் சேகரிக்க தொடங்கியுள்ளனர். விரைவில் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai