Enable Javscript for better performance
செவிலியர்கள் சொந்தமாக மருத்துவச் சேவை தொடங்க வாய்ப்புகள் அதிகம்- Dinamani

சுடச்சுட

    

    செவிலியர்கள் சொந்தமாக மருத்துவச் சேவை தொடங்க வாய்ப்புகள் அதிகம்

    By  தாம்பரம்,  |   Published on : 24th March 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BHARATH

    செவிலியர்கள் மருத்துவச் சேவை மையங்களை சொந்தமாகத் தொடங்க ஏராளமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவாளர் எஸ்.அனிகிரேஸ் கலைமதி கூறினார்.
     குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி செவிலியர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் அவர் பேசியது: பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள மருத்துவச் சேவையில் தவிர்க்கமுடியாத பணியை மேற்கொண்டுள்ள தகுதியும், திறமையும் மிகுந்த செவிலியர்களின் தேவை இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
     மருத்துவர்களின் அறிவுரைப்படி,நோயாளிகளின் உடல்நிலைக்கேற்ப தேவையான சிகிச்சை, பராமரிப்புப் பணிக்கு உறுதுணையாக செவிலியர்கள் திகழ்ந்து வருகின்றனர்.
     தென்மாநிலங்களை ஒப்பிடும்போது வடமாநிலங்களில் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கிராமப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு நிகரான பணியை செவிலியர்கள் மேற்கொண்டு மருத்துவச் சேவை பணிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். செவிலியர்கள் மருத்துவமனைகளில் வேலை தேடுவோராக இல்லாமல் சொந்தமாக பல்வேறு மருத்துவச் சேவை வழங்கும் மையங்களைத் தொடங்கி வேலை வழங்குகிறவர்களாகவும் திகழ முடியும்.
     உடல்நல மேம்பாடு, சர்க்கரை நோயாளிகளுக்கென பாதம் பராமரிப்பு மையம், இளம் கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறக்கும் முன்-பின் பராமரிப்பு மையம், தாய்ப்பால் புகட்டும் இளம் தாய்மார்களுக்கான வழிகாட்டி மையம் உள்பட 12 வகை மருத்துவ சேவை மையங்களைத் தொடங்கி தொழில் முனைவோராகத் திகழ வாய்ப்புள்ளது.
     தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு முதல் சிறந்த செவிலியர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், விருதும் அளிக்கப்படஉள்ளது. இது குறித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கு இதுவரை ஒரு செவிலியர் கூட விண்ணப்பிக்க முன்வராதது மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது என்றார் அனிகிரேஸ் கலைமதி.
     பாரத் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வி.கனகசபை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக முன்னாள் தலைமை அலுவலர் டாக்டர் ரேவதி விஜயலட்சுமி,பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், பதிவாளர் எஸ்.பூமிநாதன், துணை முதல்வர் சாய்குமார், கல்வி ஆலோசகர் வீரபாகு, செவிலியர் கல்லூரி முதல்வர் வி.ஹேமாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai