Enable Javscript for better performance
ரூ.5 லட்சம் லஞ்சம்: பொது கணக்காயர் உள்பட நால்வர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ரூ.5 லட்சம் லஞ்சம்: பொது கணக்காயர் உள்பட நால்வர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

    By  சென்னை,  |   Published on : 24th March 2018 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி. அலுவலகத்தில் (அக்கெüண்டன்ட் ஜெனரல்) ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அதன் பொது கணக்காயர் உள்பட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
     இதுகுறித்து சிபிஐ தரப்பில் கூறப்படுவதாவது:
     தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் (அக்கெüண்டன்ட் ஜெனரல் அலுவலகம்) செயல்படுகிறது. இந்த அலுவலகம் மூலம் தமிழக அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது. அதேபோல புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்தல், துறை ரீதியாக நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட அரசு நிதி சார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள் அரசின் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கும், பணியிட மாறுதல் வழங்குவதற்கும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மேலும் சில அதிகாரிகள், தங்களுக்கு கீழே பணிபுரியும் ஊழியர்களை லஞ்சம் வாங்குவதற்காக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.
     இதற்கிடையே, இது தொடர்பாக இந்த அலுவலகத்தைச் சேர்ந்த சில ஊழியர்கள், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பொது கணக்காயர் அருண் கோயல், நிதிநிலை கணக்கு பதிவு மூத்த அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்ட சில ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.
     காலை முதல் காத்திருப்பு: இந்நிலையில் இவர்கள் 4 பேரையும் கையும்களவுமாக கைது செய்வதற்கு சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி, சிபிஐ அதிகாரிகள், தேனாம்பேட்டையில் உள்ள அந்த அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காலையில் அங்கு லஞ்ச பணம் எதுவும் கைமாற்றம் ஆகாததால், சிபிஐ அதிகாரிகள் நீண்டநேரம் அங்கேயே காத்திருந்தனர்.
     கையும், களவுமாக...: இந்நிலையில், கஜேந்திரன் மாலை 5 மணியளவில் லஞ்ச பணம் ரூ.3 லட்சத்தை அருண்கோயலிடம் அவரது அலுவலகத்தில் கொடுத்தது தெரியவந்தது. அப்போது அந்தப் பகுதியில் காத்திருந்த சிபிஐ அதிகாரிகள், இருவரையும் கையும்களவுமாக பிடித்தனர். பின்னர், அவர்கள் இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்களது அலுவலகத்தில் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் பணத்தை எடுத்தனர்.
     அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் எஸ். சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் எல்.எஸ்.ராஜா ஆகியோரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர்களையும் கைது செய்வதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். கைதான 4 பேரும் சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     இதில், சிவலிங்கம், ராஜா ஆகியோர் தங்கள் பணிக்கு சாதகமாக அருண்கோயல் செயல்படுவதற்காக ரூ. 5 லட்சம் பணத்தை லஞ்சமாக கஜேந்திரன் மூலம் வழங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
     வீடுகளில் சோதனை: இந்த வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரின் சென்னை,திருவள்ளூர்,திருவண்ணாமலையில் உள்ள வீடுகள் உள்ளிட்ட சில இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இச்சோதனையில் வழக்குத் தொடர்பாக சில ஆவணங்கள் கிடைத்ததாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள அருண்கோயலின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
     லஞ்ச வழக்கில், பொது கணக்காயர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசு உயர் அதிகாரிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai