Enable Javscript for better performance
8.5 கிலோ புற்றுநோய்க் கட்டி அரசு மருத்துவமனையில் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    8.5 கிலோ புற்றுநோய்க் கட்டி அரசு மருத்துவமனையில் அகற்றம்

    By  சென்னை  |   Published on : 24th March 2018 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நோயாளியின் வயிற்றில் வளர்ந்திருந்த 8.5 கிலோ அளவிலான கட்டி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
     சென்னை அண்ணாநகரில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் வசித்து வருபவர் மோகன் ராஜ் (38). வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், கட்டியின் அளவு பெரியதாக இருந்ததால் அறுவைச் சிகிச்சையைத் தவிர்த்தனர்.
     இந்த நிலையில் இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத் துறையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்ததில் வலது சிறுநீரகத்திலிருந்து 30 செ.மீ. அளவில் ஒரு பெரிய கட்டி இருந்தது. அது கல்லீரல், கணையம் மற்றும் ரத்தக்குழாய்களின் அருகிலும் இருந்தது. மேலும் இந்தக் கட்டி சிறுகுடல், பெருங்குடலை ஓர் ஓரத்துக்குத் தள்ளி, மொத்த வயிறுப் பகுதியையும் ஆக்கிரமித்திருந்தது.
     இது தொடர்பாக மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
     இந்த அரிதான புற்றுநோய்க் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றத் தீர்மானிக்கப்பட்டது. இதனை அகற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தும் வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்டது. சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில் 8.5 கிலோ எடை கொண்ட கட்டி வெட்டி அகற்றப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமுடன் உள்ளார்.
     தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் இந்த அறுவைச் சிகிச்சை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு பொது மருத்துவமனையில் இலவசமாகச் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai