Enable Javscript for better performance
ஆயில் டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல்: 8 பேர் கைது: துப்பாக்கி, போலி போலீஸ் அடையாள அட்- Dinamani

சுடச்சுட

    

    ஆயில் டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூல்: 8 பேர் கைது: துப்பாக்கி, போலி போலீஸ் அடையாள அட்டைகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 31st March 2018 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    wepan

    சென்னை, தண்டையார்பேட்டையில் ஆயில் டேங்கர் லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்ததாக 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
    இவர்களிடமிருந்து போலீஸார் நாட்டுத் துப்பாக்கி, கத்தி, அரிவாள், போலி அடையாள அட்டை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
    தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலிய நிறுவனம், சென்னை பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின் பெட்ரோல், டீசல் விநியோக மையம் உள்ளது. இந்த மையத்தில் இருந்தே சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள எரிபொருள் மையங்களுக்கு பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இங்கிருந்து பெட் ரோல் மையங்களுக்கு பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி கரிமேட்டை சேர்ந்த ஆயில் பாலாஜி, அவரது கூட்டாளி கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த இம்ரான் ஆகியோர் தலைமையிலான ரௌடி கும்பல் பணம் பறிப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதற்கிடையே செங்குன்றத்தைச் சேர்ந்த ஆயில் டேங்கர் லாரி உரிமையாளர் வெங்கடேசன் இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
    போலீஸார் விசாரணையில், பாலாஜி தலைமையிலான ரௌடி கும்பல் ஊட்டியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டிக்கு விரைந்த தனிப்படையினர், அவர்களை வியாழக்கிழமை மடக்கி பிடித்தனர்.
    இதில் ஆயில் பாலாஜி (33), மணலி புது நகரைச் சேர்ந்த அ.கரிமுல்லா (35), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த க. ரகு (33), சிவகங்கையைச் சேர்ந்த மு.கமல்ராஜன் (32), கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த இம்ரான் (35), தண்டையார்பேட்டை நேதாஜி நகர் ச. சையத் இப்ராகிம் (33), சின்னசேக்காடு கக்கன்புரத்தைச் சேர்ந்த செ. அசோக்குமார் (37), கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த வி. செந்தில்குமார் (31) ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள ரியாஜ்கான் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 9 எம்.எம். ரகத்தைச் சேர்ந்த நாட்டுத் துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 3 அரிவாள்கள், 4 கத்திகள், 29 செல்லிடப்பேசிகள், காவல்துறை அதிகாரிகளின் போலி அடையாள அட்டை, பத்திரிக்கையாளர் போலி அடையாள அட்டை, வழக்குரைஞர் போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இந்தக் கும்பல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனர்.
    சாலை விபத்து: ஊட்டியில் இருந்து போலீஸார் ரௌடிகளை கைது செய்து, வேனில் வியாழக்கிழமை சென்னைக்கு கொண்டு வரும்போது, மேட்டுப்பாளையம் அருகே வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு பள்ளத்தில் சரிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து போலீஸார், வேறு வேனில் ரௌடிகளை அழைத்துக் கொண்டு சென்னை வந்தடைந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai