Enable Javscript for better performance
எம்டிசி பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகளிடம் ரூ.5.82 லட்சம் அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    எம்டிசி பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகளிடம் ரூ.5.82 லட்சம் அபராதம் வசூல்

    By DIN  |   Published on : 31st March 2018 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த பயணிகளிடம் கடந்த 2 மாதங்களில் ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 650 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. 
    ஜனவரி மாதம் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானமும் குறைந்தது. குறிப்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு பயணிகள் மூலம் வரும் கட்டண வசூல் பெருமளவு குறைந்தது.
    இதை சரிசெய்ய மாநகரப் போக்குவரத்துக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.
    அதன்படி பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பயணிகளிடம் டிக்கெட்டை கேட்டு வழங்க வேண்டும். பஸ் பாஸ் என்றால் அதை கேட்டு வாங்கி சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் எம்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் அவ்வபோது திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஆங்காங்கே டிக்கெட் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளையும்
    பயணிகளிடம் மேற்கொண்டனர். இதில் பலர் டிக்கெட் எடுக்காமலும், பலர் பழைய பஸ் பாஸ், ஒரே பஸ்பாஸை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டது தெரியவந்தது.
    இதனால் இரவு, பகல் பாராமல் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளிடம் ஆங்காங்கே பரிசோதனை மேற்கொண்டு பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதம் வசூலித்தனர்.
    இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக உயரதிகாரிகள் கூறியது: கடந்த பிப்ரவரி மாதம் பயணச் சீட்டின்றி பயணித்த 2 ஆயிரத்து 130 பயணியர்களிடம் இருந்து அபராதமாக ரூ.3 லட்சத்து 21, 550-ம், மார்ச் மாதம் டிக்கட் இன்றி பயணித்த 1, 305 பேரிடம் இருந்து அபராதமாக ரூ. 2 லட்சத்து 61,100 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய பரிசோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai