Enable Javscript for better performance
வங்கி கொள்ளை வழக்கு: நேபாளத்தைச் சேர்ந்த இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    
    arest

    சென்னை விருகம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொள்ளை வழக்குத் தொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த இருவரை போலீஸார் பெங்களூருவில் கைது செய்தனர்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
    விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையின் இரும்புக் கதவை கியாஸ் வெல்டர் மூலம் உடைத்து, இரு பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த சென்னையைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமான ரூ.7.46 லட்சம் மதிப்புள்ள தங்க,வெள்ளி நகைகள், சுசித்ரா என்பவருக்கு சொந்தமான ரூ.34 லட்சம் மதிப்புள்ள 130 பவுன் தங்க, வைர நகைகள் கடந்த 24-ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய, 5 தனிப்படை அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வங்கியின் காவலாளியாகவும், துப்புரவுப் பணியாளராகவும் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த சபிலால், அவரது மகன் திலு உள்பட 10 பேர் கொண்ட கும்பல் இக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருக்கும் அந்த கும்பலை தேடி தனிப்படையினர் நேபாளத்துக்கும், வட மாநிலங்களுக்கும் சென்றனர்.
    இருவர் கைது: சபிலால் யாருடன் செல்லிடப்பேசி மூலம் அதிகம் பேசியுள்ளார் என்ற தகவல்களை போலீஸார் திரட்டினர். இதில் நேபாளத்தைச் சேர்ந்த, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் தாப் பகதூர், பிரதாப், தேவ்சிங், பீம்லால் படாய்லா, குடுசிங், தேஜ்பகதூர், கணேஷ் உள்ளிடோரிடம் அதிகம் பேசியிருப்பதும், அவர்களுக்கும் இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
    இதில் தாப் பகதூர், பிரதாப் ஆகிய இருவரும் வாடகை கார் ஓட்டுநர்களாகவும், காவலாளியாகவும் பெங்களூருவில் வேலை செய்து வருவதும், பிரதாப் காரில்தான் சம்பவத்தன்று சிலிண்டர்களை வங்கிக்கு கொண்டு வந்திருப்பதும், கொள்ளையடித்த பின்னர் அனைவரும் அந்த காரில்தான் பெங்களூரு சென்றிருப்பதும் தெரியவந்தது.
    அதைத் தொடர்ந்து, சபிலால், திலு, தேவ்சிங், பீம்லால் படாய்லால் உள்ளிட்டோர் விமானம் மூலம் நேபாளத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த தாப் பகதூர், பிரதாப் ஆகிய இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நேபாளத்தில் கைது செய்ய நடவடிக்கை: தேடப்படும் தேவ்சிங், பீம்லால் படாய்லா ஆகியோர் நேபாளம் மற்றும் தில்லி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் ஆவர். இவர்களை கைது செய்து தரும்படி, நேபாள அரசை அணுகுவதற்குரிய நடவடிக்கையை சென்னை காவல்துறை எடுத்து வருகிறது. 
    இந்நிலையில், நேபாளத்தில் பதுங்கியிருந்த சபிலாலை, அந்நாட்டு போலீஸார் பிடித்துள்ளனர். அவரை இங்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கொள்ளைக் கும்பலிடமிருந்து தங்கநகைகள், பணம் ஆகியவற்றை மீட்பதற்குரிய நடவடிக்கையையும் எடுத்து வருவதாக அவர் கூறினார்.



     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai