குட்கா விவகாரம்: காவல் கண்காணிப்பாளரிடம் 2-ஆவது நாளாக விசாரணை

சென்னையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக விசாரணை நடத்தினர்.

சென்னையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக விசாரணை நடத்தினர்.
 தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தயாரிப்பு, விற்பனை நடப்பதாகவும், உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு இதில் தொடர் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
 இதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா, கலால் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்பட பலரது வீடுகளில் தில்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர்.
 மேலும், குட்கா நிறுவன உரிமையாளர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன், சிவகுமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 இதைத் தொடர்ந்து, குட்கா முறைகேடு நடந்தபோது, செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையராக இருந்த மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. இதில் சம்பத்குமாரிடம் வெளிப்படையாகவும் மன்னர் மன்னனிடம் ரகசியமாகவும் விசாரணை நடத்தினர்.
 இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஜெயக்குமார் வியாழக்கிழமை ஆஜரானார்.
 அவரிடம் மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. தன்னிடம் உள்ள சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக ஜெயக்குமாருக்கு சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
 இந்நிலையில், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிபிஐ அதிகாரிகள் முன்பு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டு, அதற்கான பதிலை பெற்றனர்.
 இது விடியோவில் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது, அதிகாரிகளின் ஒருசில கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விசாரணை மாலை 5.30 மணி வரை நீடித்தது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com