சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம்: டாக்டர் வி.சாந்தா

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிவித்தார்.
சர்க்கரை நோயுள்ள பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம்: டாக்டர் வி.சாந்தா

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா தெரிவித்தார்.
 சென்னை ராயபுரம் எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உடல்நல சிறப்பு ஆய்வு மையத்தின் தொடக்க விழா, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தாவுக்கு பேராசிரியர் எம்.விஸ்வநாதன் தங்கப் பதக்கம் சொற்பொழிவு விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த விழாவுக்கு எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவமனை, கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் டீன் டாக்டர் என்.நரசிங்கன் தலைமை வகித்தார். இந்த விழாவில், டாக்டர் வி.சாந்தா கலந்துகொண்டு பெண்களுக்கான சிறப்பு ஆய்வு மையத்தை தொடங்கி வைத்து "பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை, புற்றுநோய்' என்ற தலைப்பில் பேசியது:
 உலக அளவில் சர்க்கரை, புற்றுநோய் ஆகிய தொற்றா நோய்களால்தான் அதிக அளவில் மரணங்கள் ஏற்படுகின்றன. இதில், தற்போது சர்க்கரை நோயும், புற்றுநோயும் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 1984-இல் நடத்தப்பட்ட ஆய்வில் 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதுவே 2010-இல் 9 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்ததும், 2020-இல் 13 லட்சத்து 43 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதும் தெரியவந்துள்ளது.
 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களை விட பெண்களுக்கே புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை, பெருங்குடல் புற்றுநோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் 48 சதவீதம் பேர் மார்பகம், கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை புற்றுநோய்களாலும், மீதமுள்ள 52 சதவீத பெண்கள் இதர புற்றுநோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னெச்சரிக்கை, வாழ்க்கை முறை மாற்றம், உரிய சிகிச்சை ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
 முன்னதாக, டாக்டர் வி.சாந்தாவுக்கு பேராசிரியர் எம்.விஸ்வநாதன் தங்கப் பதக்கம் சொற்பொழிவு விருதை எம்.வி.சர்க்கரை நோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், டீன் டாக்டர் என்.நரசிங்கன் ஆகியோர் வழங்கினர். இதில், சர்க்கரை நோய் மருத்துவர் ஜெயந்தி கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com