ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை செம்மொழிப் பூங்காவில் விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி

தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள்
ஏலக்காய் முதல் காய்கறிகள் வரை செம்மொழிப் பூங்காவில் விற்பனை: தமிழக அரசு புதிய முயற்சி


தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் உற்பத்தி செய்யப்படும் ஏலக்காய் முதல் காய்கறிகள் வரையிலான பொருள்கள் சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கான விற்பனை தொடக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் தமிழக அரசின் புதிய முயற்சியைத் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களை சந்தைப்படுத்த ஒரு புதிய முயற்சியாக சமையலுக்கு நறுமணமூட்டும் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள், உலர் பழங்கள் பாக்கெட்டுகள் மற்றும் நீரா சர்க்கரை குறைந்த விலையில் நுகர்வோர் பயனடையும் வண்ணம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
ரூ.300 பாக்கெட்: ஏலக்காய் (50 கிராம்), மிளகு (50 கிராம்), கிராம்பு (50 கிராம்), ஜாதிக்காய் (30 கிராம்), ஜாதிபத்திரி (20 கிராம்), லவங்கப்பட்டை (25 கிராம்) ஆகிய ஆறு வகையான நறுமணமூட்டும் பொருட்கள் அடங்கிய பாக்கெட் ரூ.300-க்கு பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
மேலும், தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட சுவையூட்டப்பட்ட முந்திரி, மா, அன்னாசி, நெல்லி, பலா போன்ற பதப்படுத்தப்பட்ட பழங்கள் போன்றவற்றையும், தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் நீரா சர்க்கரை மற்றும் நீரா கருப்பட்டி போன்றவையும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
செம்மொழிப் பூங்கா: சென்னை செம்மொழிப் பூங்காவில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் விற்பனை மையத்தில் இதற்கான விற்பனையை வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் என்.சுப்பையன் மற்றும் தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பொருள்களை அதிகளவில் வாங்க விரும்புவோர் 9942835261 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது dd.dohpc.chn@tn.gov.in  மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்தோ பெற்றுக் கொள்ளலாம். 
மேலும், விவரங்களை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் இணையதளம்  tnhorticulture.tn.gov.in  மூலமாகவும் @thottakalai என்ற சுட்டுரை கணக்கின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

விற்பனை செய்யப்படும் பொருள்கள்
செம்மொழி பூங்காவில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் விவரங்கள்:- சமையலுக்கு நறுமணமூட்டும் பொருள்கள் கொண்ட பாக்கெட், உலர் பழங்கள் கொண்ட பாக்கெட், கிராம்பு 50 கிராம் பாட்டில், ஏலக்காய் 50 கிராம் பாட்டில், மிளகு 50 கிராம், சூக்கினி, கேரட், பீட்ரூட் , முள்ளங்கி, முட்டைகோஸ் (பச்சை), முட்டைகோஸ் (ஊதா), பிரக்கோலி, டர்னிப், நீரா கருப்பட்டி, நீரா சர்க்கரை, காய்கறி அலங்கார தட்டுகளும், மலர்கொத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஏழு நாள்களும் செயல்படும்
செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தோட்டக்கலை விற்பனை மையம் ஏழு நாள்களும் செயல்படும் என்று அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 10 மணிக்குத் தொடங்கி இடைவிடாமல் மாலை 6 மணி வரை தோட்டக்கலைத் துறையின் பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். 
பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை வார விடுமுறை நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏழு நாள்களும் பூங்கா செயல்படுவதுடன், விற்பனை மையத்திலும் பொருள்கள் தொடர்ந்து விற்கப்படும் என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செம்மொழிப் பூங்காவை தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை செம்மொழிப் பூங்காவில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் மூலம் நறுமணப் பொருள்கள், உலர் பழங்கள், காய்கனிகளுடன் கூடிய மலர் பூங்கொத்து மற்றும் 
நீரா சர்க்கரை விற்பனையை புதன்கிழமை தொடங்கி வைத்துப் பார்வையிட்ட வேளாண்மைத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி. உடன் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், தோட்டக்கலை கூடுதல் இயக்குநர்கள் பி.சிவகுமார், ச.தமிழ் வேந்தன், தோட்டக்கலை இணை இயக்குநர்கள் இரா.வி.ஸ்ரீராம், இம்மானுவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com