10-ஆவது மாடியில் இருந்து விழுந்து இரு தொழிலாளர்கள் சாவு: 3 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டையில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரு தொழிலாளர்கள் இறந்தனர். இச் சம்பவம்


சென்னை சைதாப்பேட்டையில் பத்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்த இரு தொழிலாளர்கள் இறந்தனர். இச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சைதாப்பேட்டை தாதண்டர் நகரில் ஏற்கெனவே இருந்த தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை குடியிருப்புக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக 10 தளங்களுடன் பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணி தற்போது நடைபெறுகிறது.
இக் கட்டடத்தின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள், கடந்த சில நாள்களாக 10-ஆவது தளத்தின் மேற்பகுதியில் லிப்டுக்கான கட்டுப்பாட்டு அறை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு சுமார் 15 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் வானமாதேவி பகுதியைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளர்கள் ஹரிகோவிந்தன் (46), பிரவீண் (19) ஆகிய இருவரும் புதிதாக தளம் அமைப்பதற்காக இரும்பு கம்பிகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த மரப் பலகை திடீரென விலகியது. இதில் இருவரும் கால்தவறி 10-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் கீழே விழுந்ததினால் 7-ஆவது மாடியில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த வலையும் கிழிந்தது.
இதனால் தரையில் விழுந்து பலத்த காயமடைந்த ஹரிகோவிந்தனும், பிரவீணும் அடுத்தடுத்து இறந்தனர். இது குறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையர் அனந்தராமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவர் சடலத்தையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி, தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதி செய்து கொடுக்காமல் இருந்ததாகவும், கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் தனியார் கட்டுமான நிறுவனத்தின்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளர் சுகுமார், கண்காணிப்பாளர் ஜெயபிரகாஷ், மேஸ்திரி அறிவழகன் ஆகிய 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com