ரூ.20 லட்சம் செல்லிடப்பேசி, தங்க நாணயம் திருட்டு
By DIN | Published On : 01st April 2019 04:26 AM | Last Updated : 01st April 2019 04:26 AM | அ+அ அ- |

சென்னை திருவல்லிக்கேணியில் கடை பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், தங்க நாணயங்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி பாரதி சாலை, பைகிராஃப்ட் சாலை சந்திப்பில் பிரபல செல்லிடப்பேசி கடை உள்ளது. இக் கடையின் ஊழியர்கள் சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றனர். கடையின் மேலாளர் தஜேஸ்வர் ஞாயிற்றுக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தார்.
அப்போது கடையின் ஷெட்டர் கதவை உடைத்து, கடைக்குள் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வைத்திருந்த தங்க நாணயங்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அதிர்ச்சியடைந்த அவர், ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேவேளையில் சம்பவ இடத்துக்கு விரைந்து போலீஸார் விசாரணை செய்தனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளையும் கைப்பற்றி, போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.