வயநாட்டில் ராகுல் காந்தி போட்டி: கே.எஸ்.அழகிரி, காதர் மொகிதீன் வரவேற்பு
By DIN | Published On : 01st April 2019 04:25 AM | Last Updated : 01st April 2019 04:25 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கே.எஸ்.அழகிரி: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட முடிவு செய்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இது தென் மாநில மக்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்வாகும். வயநாடு மக்களவைத் தொகுதியானது தமிழகத்தைச் சேர்ந்த நீலகிரி, தேனி மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாம்ராஜ் நகர், மைசூரு ஆகிய பகுதிகளின் எல்லைகளை ஒட்டி அமைந்திருப்பது மிகுந்த சிறப்புக்குரியது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து பாஜகவினர் கடுமையான விமர்சனத்தை எழுப்பியிருக்கின்றனர்.
2014 மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா, உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். அன்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிட்டதை ஏற்றுக் கொண்ட பாஜகவினர் இன்று ராகுல்காந்தியின் முடிவை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கே.எம்.காதர் மொகிதீன்: முதன்முறையாக ஜவாஹர்லால் நேரு குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் போட்டியிடுவதால் தென் மாநிலங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்து, புதிய சரித்திரம் படைக்கும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலிமைமிக்க வயநாடு மக்களவைத் தொகுதியிலிருந்து ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பிரதமராகும்போது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் அதனை வரவேற்பர்.