டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில்  நடைபெற்ற கருத்தரங்கில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் டாலி டேனியலுக்கு நினைவுப் பரிசு வழங்கும் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன். 
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தில்  நடைபெற்ற கருத்தரங்கில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் டாலி டேனியலுக்கு நினைவுப் பரிசு வழங்கும் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன். 

ரத்த வங்கிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்: டாக்டர் சுதா சேஷய்யன்

ரத்த வங்கிகளும், அதுசார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர்


ரத்த வங்கிகளும், அதுசார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் மிகவும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன்.
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருதியேற்றத்தின் மூலம் ஏற்படும் நோய்த் தொற்றுகளைக் கண்டறியும் பரிசோதனைகளில் நிலவும் இடைவெளிகளும், சவால்களும் என்ற தலைப்பிலான தொடர் மருத்துவக் கல்வி  நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியதாவது:
குருதியேற்றம் என்பது கடந்த காலங்களில் பல வகை மாற்றங்களையும் மேம்பாடுகளையும் கடந்து பரிணமித்து வந்துள்ளது.  இன்று பற்பல மேம்பாடுகளைக் கண்டு மானுட இனத்திற்கு மறுவாழ்வு தரும் உன்னத சேவையாகவே குருதியேற்றம் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையின் இன்றியமையாத நடவடிக்கைகளில் ஒன்றாக குருதியேற்றம் விளங்கி வருவது ஒருபுறம் இருந்தாலும், அதன் வாயிலாக நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்க வேண்டிய முக்கியக் கடமையும் நம் முன்னே உள்ளது. குருதியேற்றத்தினால் ஏற்படும் தொற்றுகள், நோயாளிகளுடன் மருத்துவர்களுக்கும் பெரும் இடரை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, அதன் விளைவாக சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்களும் ஏராளம். ரத்தம் செலுத்தப்பட்டதால் ஒருவருக்கு நோய் வருகிறது என்றால், அவருக்கு உடலளவிலும், மனதளவிலும் எத்தகைய தவிப்புகளை அது உண்டாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இத்தகைய நோய்த் தொற்றுகளைத் தடுப்பதில் கண்காணிப்பு நடைமுறைகளின் பங்கு அளப்பரியது. எனவே, அதைக் கருத்தில் கொண்டு,  ரத்த வங்கிகளும், ரத்தம் செலுத்தும் சேவைகளில் பங்கு பெறுபவர்களும் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் சுதா சேஷய்யன்.
இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் பரமேஸ்வரி, துறைத் தலைவர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com