"உலர் விழி' பிரச்னை 20% அதிகரிப்பு: ஏ.சி. பயன்பாடு காரணம் எனத் தகவல்

கோடை வெப்பம் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், உலர் விழி (டிரை ஐஸ்) பிரச்னைக்கு சிகிச்சை பெற, கண் மருத்துவமனைகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும்,
"உலர் விழி' பிரச்னை 20% அதிகரிப்பு: ஏ.சி. பயன்பாடு காரணம் எனத் தகவல்

கோடை வெப்பம் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், உலர் விழி (டிரை ஐஸ்) பிரச்னைக்கு சிகிச்சை பெற, கண் மருத்துவமனைகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வழக்கத்தைக் காட்டிலும் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 வீடுகளிலும், அலுவலகங்களிலும் குளிரூட்டும் (ஏ.சி) சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதே உலர் விழி பிரச்னை அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த வகையான பாதிப்பு ஏற்பட்டவர்கள், அதற்கான சிகிச்சையை முறையாக மேற்கொள்ளவில்லை என்றால் பார்வை குறைபாடு ஏற்படக் கூடும் என எச்சரித்துள்ளனர். உலக மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் உலர் விழி பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை 32 சதவீதம் பேருக்கு அத்தகைய பிரச்னைகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சாதாரணமான ஒன்றாக கருதப்படும் உலர் விழி பாதிப்பை கவனிக்காமல் விட்டால் நாளடைவில் அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகத் தீவிரமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோடை காலத்தில் சில வழி முறைகளைக் கடைப்பிடித்தால் இப்பிரச்னையை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து, அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பிரீத்தி கூறியதாவது:
 கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேவையான அளவு நீர் சுரக்காமல் இருந்தால் உலர் விழி பிரச்னை ஏற்படும். புறச்சூழல்களில் நிலவும் மாசு, அதீத வெப்பம், வேதிப் பொருள்கள் கலந்த காற்று ஆகியவற்றில் இருந்து விழிகளைக் காப்பது கண்ணீர்தான். ஆனால், உலர் விழி பிரச்னை இருப்பவர்களுக்கு சரிவர கண்ணீர் சுரக்காது. இதனால், கண் எரிச்சல், அரிப்பு, கூசும்தன்மை போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். கடந்த சில நாள்களாக உலர் விழி பிரச்னைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஏசி சாதனங்கள். தற்போதைய சூழலில் அவை இன்றியமையாததாகிவிட்டன. வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏசி சாதனங்களின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. அதேவேளையில், நம் உடலில் அதனால் ஏற்படக்கூடிய பல்வேறு பாதிப்புகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. நாளொன்றுக்கு 18 மணி நேரம் ஏசி அறைகளில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக உலர் விழி பாதிப்பு ஏற்படும். அதைத் தவிர்க்க, குளிர் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். 23 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் ஏசி சாதனத்தை இயக்கக் கூடாது. குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் உறங்க வேண்டும். அதிக அளவில் நீர் அருந்துவது அவசியம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com