மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: மனநல காப்பகத்தில் செயல்முறை விளக்கம்
By DIN | Published On : 11th April 2019 04:38 AM | Last Updated : 11th April 2019 04:38 AM | அ+அ அ- |

மனநல காப்பகத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கும் மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள். உடன் காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரா.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் தங்கியிருப்பவர்களில் 192 பேருக்கு வாக்குரிமை இருப்பதால், அங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மனநல காப்பகவாசிகள் வாக்களிப்பதற்கென பிரத்யேகமாக ஒரு வாக்குச்சாவடியும் அங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும், அடுத்து வரும் நாள்களில் லயோலா கல்லூரி மற்றும் பிற சமூக அமைப்புகள் சார்பில் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சுமார் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பல்வேறு வகையான உளவியல் மற்றும் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனர். உறவினர்களால் கைவிடப்பட்ட சிலர், அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவ்வாறு குணமடைந்து சரியான மனநிலையில் உள்ளவர்களில் 192 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் அண்மையில் இணைக்கப்பட்டன. அவர்களில் 78 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வாக்களிப்பது தொடர்பான செயல்முறை விளக்கத்தை அளிக்க மனநல காப்பகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சென்றனர். அப்போது மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்தும், வாக்கு ஒப்புகைச் சீட்டு சாதனங்களில் அதனை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இதுகுறித்து, மனநல காப்பக இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகா கூறுகையில், மத்திய சென்னை தொகுதியின் கீழ் மனநல காப்பகம் வருகிறது. முதன்முறையாக இங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு 192 பேர் வாக்களிக்க உள்ளனர். அடுத்த கட்டமாக, தகுதியான காப்பகவாசிகளுக்கு ஆதார் அட்டை பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட உள்ளோம் என்றார்.