அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நீடிப்பு
By DIN | Published On : 14th April 2019 03:08 AM | Last Updated : 14th April 2019 03:08 AM | அ+அ அ- |

அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.
இது குறித்த விவரம்:
தமிழக நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான நாமக்கல் மாவட்டம் நடுக்கோம்பை பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.கே. பெரியசாமி, ஒரு அரசியல் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமானவரித்துறையினர் அவரது வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.
மேலும் பெரியசாமியின் மகன்கள் அருண்குமார், அசோக்குமார் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள், அவர்களது நிறுவனம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அருண்குமார் வீடு, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு, அண்ணாநகர்,போயஸ் தோட்டம் ஆகிய இடங்களும் சோதனைக்கு தப்பவில்லை.
இதேபோல சென்னையைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. சென்னையில் 13 இடங்கள், நாமக்கல்லில் 4 இடங்கள், திருநெல்வேலியில் ஓரிடம் என மொத்தம் 18 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இரண்டாவது நாளாக நீடிப்பு: இதில் பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் மட்டும் ரூ.14.54 கோடி கணக்கில் வராத பணமும், ஆவணமும் கைப்பற்றப்பட்டன. அதேபோல சுஜய் ரெட்டியிடமிருந்து கணக்கில் வராத ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஒரு சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பாலான இடங்களில் இரண்டாவது நாளாகவும் சனிக்கிழமை சோதனை நடைபெற்றது. இரண்டாவது நாள் சோதனையிலும், கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர். ஆனால் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணம் குறித்த தகவலை வருமான வரித்துறையினர் கூற மறுத்துவிட்டனர்.