அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துகள் விவரம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், அவர்களது பெயர்களில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும்

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும், அவர்களது பெயர்களில் உள்ள சொத்துகளின் விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
 இந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டுடன் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஆதாரை இணைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.அன்னாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்குரைஞர் ஏ.ராஜபெருமாள் வாதிட்டிருந்தார்.
 இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பொது நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
 அரசின் பிரதிநிதிகளாக அரசுப் பணியாளர்கள் இருப்பதால் வருகைப் பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைப்பது விதிமீறல் இல்லை. அரசுப் பணியாளர்கள் மத்தியில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை உறுதி செய்ய தமிழக அரசு இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
 ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவதில்லை, பணி நேரத்துக்கு முன்பாக பள்ளியிலிருந்து சென்று விடுவதாகவும், இடைப்பட்ட நேரத்தில் ஆசிரியர் பணிக்கு தொடர்பில்லாத பல்வேறு பணிகளை மேற்கொள்வதாகவும் பொதுமக்களிடம் இருந்து அரசுக்குப் புகார்கள் வருகின்றன. எனவே ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் இதுபோன்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
 இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனுதாரரிடம் ஆதார் இல்லை என்றால், முறையாக விண்ணப்பித்து அட்டையைப் பெற வேண்டும். ஒருவேளை பெற விருப்பம் இல்லாத பட்சத்தில் ஆசிரியர் பணியைத் தொடர்வதா அல்லது பதவியை விட்டுச் செல்வதா என்பது குறித்து அவர் முடிவு செய்ய வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் அதிகமாக பெறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மோசமாக உள்ளது.
 இது வரி செலுத்தும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் செலுத்தும் வரியின் மூலம் ஊதியம் பெறும் அரசு ஆசிரியர்கள் அனைத்துத் தகுதிகளுடன் இருந்தும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியைப் போதிப்பது இல்லை.
 அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெரும் தொகையை அரசு ஆண்டுதோறும் வழங்கினாலும், சிறந்த கல்வி மாணவர்களுக்குக் கிடைப்பது இல்லை.
 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை பணிப் பதிவேட்டில் உள்ள ஆசிரியர்களின் சொத்து விவரங்களுக்கும், ஆசிரியர்களின் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களுக்கும் வித்தியாசம் காணப்பட்டால் அவர்கள் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com