சுடச்சுட

  
  ELECTION

  தமிழகத்தில் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி, 1.39 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
   தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது. இத் தேர்தலையொட்டி, ஒரு மாதத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. தேர்தல் ஆணையமும், மாநில காவல்துறையும் செய்து வந்த தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
   1.39 லட்சம் போலீஸார்: ஏற்கெனவே பாதுகாப்பு முன்னேற்பாடாக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தவர்களிடமிருந்து சுமார் 20 ஆயிரம் துப்பாக்கிகள் வாங்கப்பட்டு விட்டன. வங்கி மற்றும் கோயில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மட்டும் வாங்கப்படவில்லை. தேர்தலில் தகராறில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ரௌடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். 18 ஆயிரம் குற்றவாளிகளை காவல்துறை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. மேலும் இவர்களை காவல்துறை அழைத்து எச்சரிக்கவும் செய்துள்ளது.
   தேர்தல் நடைபெறும் நாளன்று மாநிலம் முழுவதும் சுமார் 1.39 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 63,951 தமிழக போலீஸார், 27,400 துணை ராணுவப்படையினர், 13,882 ஊர்க்காவல் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவல்துறையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர் என மொத்தம் 1,39,233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
   ஐந்து அடுக்கு பாதுகாப்பு: மொத்தம் உள்ள 67,720 வாக்குச் சாவடிகளில், பதற்றமானவை என 8,293 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு போலீஸார் மட்டுமின்றி துணை ராணுவ வீரர்களும் பணியில் இருப்பார்கள். இது தவிர மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் 5 அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளன.
   முதல் அடுக்கில் வாக்குச்சாவடியின் வாசலில் போலீஸாரும், துணை ராணுவ வீரரும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இரண்டாம் அடுக்கில் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் ஒரு போலீஸ் குழு நிற்கும். இவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை கண்காணித்த பின்னர் உள்ளே அனுப்புவார்கள். தேவைப்படும்பட்சத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் வரும் வாக்காளர்களை சோதனையும் செய்வார்கள்.
   மூன்றாம் அடுக்கில் ஒவ்வொரு காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர்கள் தலைமையில் ஒரு பறக்கும் படை தயார் நிலையிலே இருக்கும். இந்த தனிப்படையினர் அந்த காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருப்பார்கள். நான்காம் அடுக்கில் முக்கியமான சாலைகளிலும், நகரங்களின் நுழைவாயிலிலும் சோதனை மையம் அமைக்கப்பட்டிருக்கும். ஐந்தாவது அடுக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பறக்கும் படையினர் இருப்பார்கள். இவர்கள் ஏதேனும் வாக்குச்சாவடிகளில் தகராறோ அல்லது பிரச்னையோ ஏற்படும் பட்சத்தில் அங்கு விரைந்து சென்று, பிரச்னையைத் தீர்ப்பார்கள்.
   6 ஆயிரம் பதற்றமான பகுதிகள்: தேர்தல் தகராறுகளை கட்டுக்குள் வைப்பதற்காக, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோருடன் 1,100 வாகனங்களில் அதி விரைவுப் படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள சுமார் 6 ஆயிரம் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
   வாக்குப்பதிவின்போது தகவல்களை ஒருங்கிணைக்கவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலும் தகவல்களை ஒருங்கிணைக்கவும், புகார் தெரிவிக்கவும் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
   வாக்குப்பதிவின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் பொதுமக்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறைகளை தொடர்புக் கொண்டு புகார் தெரிவிக்கலாம். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தல் சிறப்பு டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai