ஆந்திர இளம்பெண்ணின் இதயம் தமிழக சிறுமிக்கு பொருத்தம்

மூளைச் சாவு அடைந்த ஆந்திர இளம்பெண் ஒருவரின் இதயம், தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிக்கு பொருத்தப்பட்டது.

மூளைச் சாவு அடைந்த ஆந்திர இளம்பெண் ஒருவரின் இதயம், தமிழகத்தைச் சேர்ந்த சிறுமிக்கு பொருத்தப்பட்டது. அப்பெண்ணின் பிற உடல் உறுப்புகள் பயனாளிகளுக்கு பொருத்துவதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விவரம்:

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசிராம். ஆட்டோ ஓட்டுநர். அவரது மனைவி வாணிஸ்ரீ(23).  இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வாணிஸ்ரீ உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மூளையில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் அவதியுற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள  மியாட் மருத்துவமனைக்கு அண்மையில் வாணி ஸ்ரீ மாற்றப்பட்டார்.
இதனிடையே, சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க வாணிஸ்ரீயின் உறவினர்கள் முன்வந்தனர். அதன்படி, இதயம், சிறுநீரகம் உள்பட 8 உடல் உறுப்புகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டன. அடையாறு மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவருக்கு, வாணிஸ்ரீயின் இதயம் பொருத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. 
வாணிஸ்ரீயிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட மேலும் சில உறுப்புகள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், பயனாளிகளுக்கு பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com