2 மாதத்துக்கு ரூ.5,000 மின் கட்டணம்: பரிதவிக்கும் குடிசை மாற்று வாரிய மக்கள்

சென்னை அத்திப்பட்டு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் பலருக்கு ரூ.5,000 வரை மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள்.
சென்னை அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகள்.

சென்னை அத்திப்பட்டு குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் பலருக்கு ரூ.5,000 வரை மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபுகுந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் இவ்வளவு பெரிய தொகை எப்படி  வந்தது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

சென்னை மாநகரப் பகுதியில் குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் குடிசைமாற்று வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டில் ஒரு அடுக்குமாடிக்கு 16 வீடுகள் வீதம் மொத்தம் 1,400 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நியூ ஆவடி சாலையில் ஐசிஎஃப் காந்தி நகரில் குடிசைகளில் வசித்த 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் கடந்த ஜனவரி மாதம் இங்கு குடிவந்தனர். இந்நிலையில், இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு ரூ. 5,000 வரை  மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.  தங்களிடம் உள்ள மின்சாதனப் பொருள்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரமே போதுமான நிலையில், இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்ததென்று தெரியாமல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அங்கு  வசிக்கும் மூதாட்டி அங்கம்மாள் உள்ளிட்டோர் கூறியது: கடந்த ஜனவரி மாதம் தான் இங்கு குடிவந்தோம். வீட்டில் நானும், எனது கணவர் மட்டுமே உள்ளோம். எங்கள் வீட்டில்  இரண்டு மின் விசிறிகள், மூன்று மின் விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே உள்ளன. கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கான மின்கட்டணம் கடந்த மார்ச் 15-ஆம் தேதி கணக்கிடப்பட்டது.  அதில், நாங்கள் 940 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி உள்ளதாகவும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான தொகை ரூ. 250 போக மீதி ரூ. 4,814 மின் கட்டணமாக வந்திருந்தது.  இதுபோன்று 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ரூ.1,000 முதல் ரூ. 5,000 வரையில் மின் கட்டணம் வந்துள்ளது.

இதுதொடர்பாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால், இப்பிரச்னை மீது நடவடிக்கை எடுக்காமல், மின் கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்குப் பயந்து வட்டிக்குப் பணம் வாங்கி மின் கட்டணத்தைச் செலுத்தினோம். இந்த வீடுகள் கட்டுமானத்துக்குப் பிறகு, குடிநீர்க் குழாய் இணைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் இங்குள்ள வீடுகளில் பல மாதங்களாக குடும்பத்துடன் தங்கி இருந்தனர். அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கான கட்டணத்தையும் எங்களை கட்டச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? கூலித் தொழிலாளிகளான எங்களால் இவ்வளவு பெரிய தொகையை கட்டவே முடியாது. இப்பிரச்னையில் அரசு உடனடியாகத் தலையிட்டு மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றனர்.

எங்களுக்கு சம்பந்தமில்லை: இதுகுறித்து குடிசைமாற்று வாரிய அதிகாரி மோகனன் கூறுகையில், "இந்தப் பிரச்னைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீட்டுக்கான மின் இணைப்பைப் பெற்றுக் கொடுப்பதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது. மின்சார வாரியம்தான் இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
ஆய்வு நடத்தப்படும்: இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், "இப்பிரச்னை குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. அங்கு விரைவில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com