இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பெரும்பாலும் அரசு நிலங்களிலேயே கட்டுமானப் பணி!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அரசு நிலத்தின் பெரும்பகுதிகளில் அமையவுள்ளதால், குடியிருப்புகளுக்கான பாதிப்பு குறைந்த அளவே இருக்கும்  எனத் தெரிய வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: பெரும்பாலும் அரசு நிலங்களிலேயே கட்டுமானப் பணி!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அரசு நிலத்தின் பெரும்பகுதிகளில் அமையவுள்ளதால், குடியிருப்புகளுக்கான பாதிப்பு குறைந்த அளவே இருக்கும்  எனத் தெரிய வருகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்,  சென்னையில் 45 கி.மீ. தூரத்துக்கான முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முடிந்து, சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே இரண்டாவது வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மூன்று வழித்தடங்களில் 119 கி.மீ.க்கு ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. மாதவரம்-சிறுச்சேரி சிப்காட் (45.9 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் (47 கி.மீ.), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி ( 26.1 கி.மீ) ஆகிய பாதைகள் இந்தத் திட்டத்தில் அமைக்கப்படவுள்ளன.

மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியானது கடந்த ஆண்டு தொடங்கியது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணிக்காக இடங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.   இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் பெரும்பாலும் அரசு நிலத்தில் அமையவுள்ளதால்,  குடியிருப்புகள் பாதிப்பு குறைந்த அளவே இருக்கும் என்று தெரியவருகிறது. சென்னை மெட்ரோவில் இரண்டாம் கட்ட திட்டப் பணிக்கு ரூ.69ஆயிரத்து180 கோடி செலவாகும்  என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 119 கி.மீ. தூரத்தில் 128 நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு 120.98 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. இதில், தனியார் நிலமாக 27.19 ஹெக்டரும்,  மீதமுள்ள 93.79 ஹெக்டர் நிலம் அரசு நிலமாகவும் இருக்கும். 

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியது: அரசு நிலத்தை முதன்மையாகப் பயன்படுத்த உள்ளோம். இதன்மூலம், குறைந்த எண்ணிக்கையில் தான் பாதிப்பு இருக்கும். மெட்ரோ முதல் கட்ட திட்டத்துடன் ஒப்பிடும்போது,  முதல் கட்ட விரிவாக்க திட்டத்துக்கு குறைந்த அளவு நிலத்தை கையகப்படுத்தினோம். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு

அத்தியாவசியத்துக்காக மட்டுமே நிலத்தை பெறுகிறோம். மெட்ரோ நிலையங்களின் பரப்பளவு 220 மீட்டர் இருந்து 150 மீட்டர் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.  

சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு 1,309 சொத்துகள் தேவைப்படுகின்றன.

குடும்பங்கள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கப்படும். இதுதவிர, மெட்ரோ ரயில்கள் பராமரிப்பு மற்றும் மற்ற பணிகளுக்காக மாதவரம், சிப்காட், பூந்தமல்லியில் கட்டடம் கட்டுவதற்கு நிலம் தேவைப்படும்.  மாதவரம் பணிமனை கட்டடத்துக்கு 27.8 ஹெக்டரும், சிப்காட் பணிமனை கட்டடத்துக்கு 4.5 ஹெக்டரும், பூந்தமல்லியில் பணிமனை கட்டுவதற்கு 15.4 ஹெக்டரும் தேவைப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com